Situation Comedy எனப்படும் Sitcom என்கிற வகைமையில் இந்திய அளவில் நிறைய ஹிட் சீரீஸ்கள் வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் “ஏ ஜோ ஹே ஜிந்தகி” “ஹம் பாஞ்ச்” ”தேக் பாய் தேக்” போன்றவை தூர்தர்ஷனின் பொற்காலத்தில் வெளியான சிட்காம்கள்.
சிட்காம்களின் சுவாரஸ்யமே அதில் வரும் கேரக்டர்கள்தான். அக்கேரக்டரிகளின் ஆர்க் தான் பார்க்கும் நமக்கு கிச்சு கிச்சு மூட்டவோ, வாய் விட்டு சிரிக்கவோ வைக்கும். அப்படி வைக்காவிட்டாலும் பின்னணியில் சிரிப்பொலியைப் போட்டு நம்முள் இருக்கும் நகைச்சுவை உணர்வை தூண்டிவிட்டாவது சிரிக்க வைத்துவிடுவார்கள்.
சிட்காம்களில் நகைச்சுவை பெரும்பாலும் அப்சர்டாகத்தான் இருக்கும். காரணம் நிஜவாழ்க்கையின் அபத்தங்களிலிருந்து தப்பிக்க நினைக்கும் மனிதர்களுக்கானது சிட்காம்கள். ஆங்கிலத்தில் சிட்காம்களின் வரிசை பெரிது. குறிப்பாய் “சிம்சன்ஸ்” “பிக் பேங்க் தியரி” ‘ப்ரெண்ட்ஸ்” எல்லாம் கல்ட் ஹிட் லிஸ்டில் அடுத்த தலைமுறை வரை வரக்கூடிய சாத்தியங்கள் உள்ளவை. அப்படியான ஒர் சிட்காம் தமிழில் வரவேயில்லையா என்று நீங்கள் கேட்டீர்களானால் அது எனக்கு தெரிந்து நாகாவின் இயக்கத்தில் வெளியான ”ரமணி V/S ரமணி” யை மட்டுமே சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
ஏனென்றால் முதலில் நல்ல சிட்காமுக்கு ஏற்கனவே சொன்னது போல சுவாரஸ்யமான கேரக்டர் ஆர்க் வேண்டும். அவர்களின் கேரக்டர்களின் முரணும், அதனை அடிப்படையாய் வைத்து எழுதப்படும் வசனங்களும், அதற்கான அவர்களின் நடிப்பும்தான் ரசிக்க வைக்கும். அந்த வகையில் இன்றைக்கும் ரமணிகளாய் நடித்த தேவதர்ஷிணி, ராம்ஜி ஆகியோரை யாராலும் மறக்க முடியாது. தேவதர்ஷணியின் அட்டகாசமும், அடிபடியும் அப்பாவி ராம்ஜியின்
கேரக்டர்களை யோசித்துப் பாருங்கள். அக்கதை முழுவதும் இக்கேரக்டர்களின் தன்மையை
வைத்தே எழுதப்பட்டிருக்கும். அப்போதுதான் நான் சொன்ன அப்சர்ட்களை, எமோஷன்களை
வைத்து சிட்ஷுவேஷன் காமெடி செய்ய முடியும். லாஜிக் இல்லா மேஜிக். தமிழில் முதலில்
முயன்று தயாரித்தது கவிதாலயா நிறுவனம் தான்.
இப்போது அதே நிறுவனம் தயாரித்து அமேசான் ஒரிஜினலாக இல்லாமல் ரெவென்யூ ஷேரிங்கில் வெளியாகியிருக்கும் சீரீஸ் “டைம் என்ன பாஸ்”. இது ஒரு சிட்காம். உருவாக்கி,
இயக்கியிருப்பவர் சூப்பர் சுப்பு. இவர் இதற்கு முன்பு சுட்டகதை எனும் திரைப்படத்தை
இயக்கியவர்.
சரி டைம் என்ன பாஸுக்கு வருவோம். பரத், ப்ரியா பவானி சங்கர், ரோபோ
சங்கர், கருணாகரன், அலெக்ஸ் என செம்ம நடிகர்கள் பட்டாளம். எப்போதும் கூட்டமாய்
இருக்கும் குடும்பத்திலிருந்து விலகி, தனியே வசிக்க ஆசைப்படும் பாலாவின்
வீட்டினுள் கடவுளோ, அல்லது அப்படி உணரப்படுகிற காலமோ ஒர் விளையாட்டை
விளையாடுகிறது. பல்வேறு கால நிலைகளில் உள்ள மனிதர்களை டைம் ட்ராவல் மூலமாய்
பாலாவின் வீட்டினுள் இறக்குகிறது.
சோழர் காலத்திலிருந்து வந்த கிள்ளி, எழுபதுகளிலிருந்து வரும் பிஎச்டி
டாக்டர் பாரதி, 1895யிலிருந்து வரும் ஹன்னா க்ளாக், 2085லிருந்து வரும் பகி
என்பவன் என எல்லோரும் ஒரே வீட்டில்
வந்தடைகிறார்கள். இவர்களுக்கு இடையிடையே தொல்லை கொடுக்கும் வாட்மேன் அலெக்ஸ் வேறு.
ஐயம் ஏ வாட்ச் மேன் வாட்ச் பண்ணிட்டேயிருப்பேன் என்று பஞ்ச் டையலாக் சொல்லிக்
கொண்டேயிருப்பவர். இவர்கள் வந்து அடிக்கும் கொட்டம் தான் கதை.
சுவாரஸ்யத்துக்கு பஞ்சமேயில்லாத கதைக் களன். டாய்லெட் ப்ளஷ் மூலமாய்
டைம் ட்ராவல். இன்னொரு ஆள் மேஜர் சுந்தராஜன் போல பேசுகிறவர் பாதி டைம் ட்ராவலின்
போது ப்ளஷ் பை உடைந்து கம்மோடிலிருந்து வெறும் அசரீரியாய் யார் பாத்ரூமுக்குள்
போனாலும் “யெஸ் கம்மின் உள்ள வாங்க’ என்று அழைப்பது. ஹிப்பாப் ஆதி தான் 2085
முதல்வர். லெஜெண்ட். இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ் கலாய்த்தல், அலெக்ஸ் மூலமாய்
சூர்யாவை ஐயம் எ வாட்ச்மேன் என 24 படத்தின் பஞ்சை கலாய்ப்பது என ஆரம்பித்து
பூமியில் உள்ள அத்தனை விஷயங்களையும் போகிற போக்கில் வசனங்களால்
கலாய்த்தெடுக்கிறார்கள். ரூர் ஜஹான் எனும் ஹோட்டல் ஓனர். தலைவர் செத்துட்டாரா
இல்லையா? என்று போஸ்டர் ஒட்டும் குழப்பத்தில் சாகப் போற தலைவரை வைத்து ஓட்டும்
அரசியல் கிண்டல் என கிண்டல் கேலிகளோடு தான் பயணிக்கிறது இந்த “டைம் என்ன பாஸ்?”.
வெறும் வசனங்களாலும் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுவது மட்டுமே
போதும் என்று நினைத்தீர்களானால் நிச்சயம் இது உங்களுக்கு திருப்தியான சிட்காம்
தான். ஆனால் ஒர் சிறந்த சிட்காமுக்கு உதாரணமாய் நான் சொன்ன கேரக்டர் ஆர்க் தான்
நாம் அதனுடன் இணைந்து பயணிக்க முடியும். அது இதில் மிஸ்ஸானதுதான் பெரிய லெட் டவுன்
என்றே சொல்ல வேண்டும்.
குறிப்பாய் பல கால நிலைகளிலிருந்து வந்தவர்கள் ரெண்டொரு எபிசோடில் சம
கால ஆட்களாய் மாறிப் போனது. அவர்களின் தனித்துவமான கேரக்டரை வைத்து ஃபன் செய்து
அதகளப்படுத்தியிருக்கலாம். கால நிலை குழப்பம், கலாச்சார குழப்பம். என பல விஷயங்களை
வைத்து அப்சர்டான பல விஷயங்களை தொகுத்திருக்கலாம். குறிப்பாய் நடித்தவர்களில்
ஒரளவுக்கு ஓகே என சொல்லாம் என்றால் கருணாகரன் தான் ஆங்காங்கே நச் பஞ்ச் அவர் கால
விஷயங்களோடு தொடர்பு படுத்தி ஜோக் அடிக்கிறார். மற்றவர்கள் எல்லாம் வந்த காலத்தை
மறந்து நிகழ் காலத்தில் உலாவ ஆரம்பித்து கேரக்டர்களின் சுவாரஸ்யத்தை இழந்ததால்
சிட்காமும் சுவாரஸ்யம் இழந்து போய்விடுகிறது. சரி அவர்களுக்கு ஏற்படும்
பிரச்சனைகள் படு சுவாரஸ்யமாய் இருக்கிறதா என்று பார்த்தா படு வறட்சி. ஒரே ஒரு
எபிசோடில் தன்னை பார்க்க வரும் முறைப்பெண்ணை கலாய்த்து அனுப்ப ப்ளான் செய்து அதில்
சொதப்பலாகும் காட்சி தான் நல்ல சிங்குடன் இருந்தது. மற்ற எபிசோடுகளில்
சுவாரஸ்யம் போனதற்கு காரணம் ரைட்டிங்.
வசனங்களில் இருக்கும் சர்காசம் எடுபடாமல் போனதற்கு காரணம் சிட்காமுக்கே உண்டான
சிட்சுவேஷனில் காமெடில் இல்லாமல் போனதுதான்.
கான்செப்டை உருவாக்கி இயக்கியிருக்கும் சுப்புவின் அப்ஸ்ட்ராக்ட்
காமெடியை நான் சுட்ட கதையிலேயே பார்த்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். இது அவரது
இன்னொரு முயற்சி. ரைட்டர்ஸ் டீமின் ஒத்துழைப்பும், நடிகர்களின் ஒத்துழைப்பும்
இருந்திருந்தால் ஒரு வேளை பிழைகள் இல்லாமல் வந்திருக்குமோ என்கிற ஆதங்கம்
இருக்கத்தான் செய்கிறது. பட்.. குட் ட்ரை.
எப்போதும் வெட்டு குத்து, கொலை, கற்பழிப்பு, கஞ்சா, க்ரைம் என்றே
பார்த்து ஒரு மாதிரியான மனநிலையில் இருப்பவர்கள் ஒரு முறை ட்ரை பண்ணுங்க. லாஜிக்
எல்லாம் பார்க்காமல்.
Post a Comment
No comments:
Post a Comment