Thottal Thodarum

Apr 3, 2021

நான் ஷர்மி வைரம்-விமர்சனம் -4



 நான் ஷர்மி வைரம். விமர்சனம் #4

எனது பார்வை
புதினம்: நான் ஷார்மி வைரம் (A)
எழுத்தாளர்: கேபிள் சங்கர் ( எ) Cable Sankar
விலை: ரூபாய். 200/-
Kindle:
டிஸ்கி:. எழுத்தாளரே கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு என்பதை உணர்த்த தலைப்பை விட பெரிய (A) சான்றிதழ் தந்துள்ளார். அதனால் கலாச்சார போராளிகள் வேறு இடம் பார்க்கவும்.
நண்பர் கேபிள் சங்கர் - வியாபாரம், எழுத்தாளர், விநியோகிஸ்தர், விமர்சகர், இயக்குனர் என்ற பன்முகம் உள்ளவர். வலைதளத்தின் (blog) தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமான நபர்.
இவரின் எழுத்துப்பாணியை அவர் மானசீக குருவாக மதிக்கும் எழுத்தாளர் சுஜாதாவைப் போல ஒரு பாணியில் வகைப்படுத்த முடியாது.
இவரின் இந்த கதை - இலக்கிய வகையை சார்ந்ததா என்ற கேள்விக்கு நமது பதில் - ஆம், இது வெகுஜன இலக்கியம்.
இந்த கதை, பாலியல் களத்தை பின்புலமாகக் கொண்டது.
சந்தர்ப்ப சூழ்நிலையால் விலைமகனாகும் ஒருவன் - ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தினால் விலைமகளாகும் ஒருத்தியின் மேல் காதல் கொள்ள , அதை வைரம் என்ற சூது கவ்வ - துரோகம், குரோதம், கொள்ளை , விளைவு - என ஒரு அசத்தல் புதினம்.
முதலில் எழுத்தாளருக்கு ஒரு ஷொட்டு -இந்த பின்புலமே புதிது, அதை விலாவாரியாக விவரிக்க எத்தனை மெனக்கிடல். மனிதர் அதகளப்படுத்தியிருக்கிறார். வாசிப்பவரின் கண்முன்னே விரிகிறது கதைத்களம் - வாசகனை ஒர் பார்வையாளனாக முதல் பக்கதிலிருந்தே மாற்றிவிடுகிறார்.
இந்த கதையை தொடராக 2011ல் வலைதளத்தில் எழுத ஆரம்பித்தவர் - ஏனோ முழுத்தொடராக முடிக்கவில்லை. யானை நீண்ட பிரசவ காலம் கொண்டு குட்டியை ஈன்றெடுப்பது போல இந்த கருவோடு எட்டாண்டு காலம் வாழ்ந்து, இன்று புதினமாக தருவித்துள்ளார்.
திரையுலகில் ப்ளாக் ஹீயூமர் என்ற வகையறா உண்டு. இந்த கதையும் அதில் ஓர் அங்கம் தான்.
எழுத்தாளர் இந்த புதினத்தை வலைத்தொடராக எடுக்கும் முயற்சிகளில் உள்ளதாக தெரிகிறது.
அப்படி எடுக்கும் பட்சத்தில் தமிழுக்கு பதிலாக ஹிந்தி மொழியில் எடுத்தால் மிகப்பெரிய வெற்றி பெற வாய்ப்பு உண்டு.
விரைவில் - Guy Ritchie, Anurag Kashyap, நலன் குமாரசாமி, தியாகராஜன் குமாரராஜா போன்ற இயக்குனர்களின் வரிசையில் இந்த எழுத்தாளர் இடம் பெற இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
பின்குறிப்பு :
ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு சுயக்கருத்து உண்டு !
அதனை நான் உணர்ந்து , போற்றி, வழி மொழிகிறேன்!
இப்பதிவு இந்த நூலைப்பற்றிய எனது பார்வை மட்டுமே !
மற்றவரின் பார்வையில் இது வேறு படலாம் !

Post a Comment

No comments: