அஸிஸ்டெண்ட்
புராணம் -1
ஒரு
இயக்குனருக்கு உதவியாளர்கள் அமைவது என்பது வரம். பல சமயம் நாம் அவருக்கு உதவியா இருக்கிறோமா?
இல்லை அவர் நமக்கா? என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு உதவியாளர்கள் அமைவது உண்டு. ஒவ்வொரு
உதவியாளரும் ஒவ்வொரு யுனிக் கேரக்டர்கள். அவர்களின் ஆட்டிட்டியூட், சினிமா, அது பற்றிய
புரிதல் என எல்லாமே தனித்துவமாய்த்தான் இருக்கும். பெண்களை புரிந்து கொள்வதில் உள்ள
அத்தனை பிரச்சனைகளும் இவர்களுக்கும் உண்டு. முதல் படத்திற்கு நான்காவது படத்திற்கிடையே
இவர்களது தனித்துவமான விஷயங்கள் எல்லாம் உதிர்ந்து போய், வெறும் கூடாய் நிற்பவர்கள்
அதிகம். சரி விஷயத்துக்கு வருவோம்.
வாரத்துக்கு நான்கு பேராவது “சார்.. உங்க கிட்ட வேலை செய்யணும். வாய்பிருந்தா சொல்லுங்க” என்று இன்பாக்ஸிலோ, மெசேஜிலோ கேட்டுக் கொண்டேதானிருப்பார்கள். ஒரு கதையையோ, திரைக்கதையையோ, எழுதி முடிக்கும் வரை எனக்கு எப்போதும் உதவியாளர்கள் தேவையில்லை. முன்கள வேலை ஆரம்பிக்கும் போதுதான் உதவியாளர்களை அமைத்துக் கொள்வேன். தினம், டீ வாங்கி வருவதற்கோ, அல்லது வண்டியோட்டுவதற்கோ உதவியாளர்களை வைத்துக் கொள்வதில் எனக்கு விருப்பமே இருந்ததில்லை. அது மட்டுமில்லாமல் சம்பளமில்லாமல் யாரையும் நான் பணிக்கு அமர்த்திக் கொள்ள விரும்ப மாட்டேன். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், எத்தனையோ கனவுகளை ஏந்திக் கொண்டு அலைகிறவகளின் கற்பனையை தக்க வைத்துக் கொள்ளவாவது
பணமும், உணவும் வேண்டுமல்லவா?.
கிட்டத்தட்ட ஒன்னரை வருடங்களாய் ஒரு தம்பி “சார் உங்க கிட்ட வேலை செய்யணும்” என்று வழக்கம் போல கேட்டுக் கொண்டேயிருந்தார். நானும் அவரை இன்னும் ஏதும் வேலை ஸ்டார்ட் ஆகவில்லை. அதனால் வெயிட் பண்ணுங்க என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். இப்படியான தொடர் பாலோ அப்பில் பல பேர் காணாமல் போய் விடுவார்கள். அல்லது வேறு வேலை ஏதாவது கிடைத்துவிடும். அதன் பிறகு கால் செய்வது நின்று விடும். ஆனால் இந்த தம்பி அப்படியெல்லாம் இல்லாமல் நடுவில் வேறு படத்தில் வேலை கிடைத்து அந்தப் படத்தில் வேலைப் பார்க்கும் போது கூட தொடர்ந்து இந்த படம் முடிச்சிட்டு வந்திடறேன் சார். என்று மாதத்திற்கு ஒரு நாளாவது கால் செய்வார். அம்மாதிரியானவர்களை குறித்து வைத்துக் கொண்டு வேலைக்கு
அழைப்பேன்.
சரியாய் இவ்வருட ஆரம்பத்தில் ஒரு ப்ராஜெக்ட் எல்லாம் உறுதி செய்யப்பட்டு மார்ச்சுக்கு மேல் படப்பிடிப்புக்கு போகலாம் என்று முடிவு செய்த நேரத்தில் தம்பியும் சரியாய் போன் செய்ய, வாடா தம்பி என்று அழைத்தேன். தம்பியும் வந்தார். கதைப் பற்றி பேசி இன்னும் சில வாரங்களில் வேலை தெடங்கும், என்று சொல்லி அனுப்பிவைத்தேன். “உங்க கிட்ட வேலை செய்யணும்னு ஆசைப்பட்டதே இதுக்குத்தான் சார்.
பாருங்க. என்னோட கதை டிஸ்கஸ் பண்றீங்க. என் கருத்துகளை சொல்ல சுதந்திரம் கொடுக்குறீங்க.
அது எல்லா இடத்துலேயும் கிடைக்காது. கத்துக்க முடியாது. உங்க கிட்ட கத்துக்க நான் இத்தனை
நாள் பாலோ பண்ணது வீண் போகல” என்று உணர்ச்சிவசப்பட்டார். நான் தொடர்ந்து இம்மாதிரியான
நேரடி பாராட்டுதல்களுக்கு பின்னான ரியாக்ஷன் பற்றி தெரிந்தவனாகையால் வடிவேலுவின் மீம்
போல முகத்தை வைத்துக் கொண்டேன்.
சில நாட்களில் கொரானா ரெண்டாம் அலை, லாக்டவுன் என்று எல்லா வேலைகளும் தள்ளிப் போனது. இதன் நடுவில் தம்பிக்கு காதல் திருமணம்
ஏற்பாடானது. தம்பதி சமேதராய் வந்திருந்து நடத்திக் கொடுக்க அழைத்தார்கள். கொரோனாவினால்
போக முடியவில்லை.
கொரானாவின் தாக்கம் வழக்கம் போல எல்லாவற்றையும் தள்ளிப் போட்டு விட, மீண்டும்
வேலை தொடங்கலாம் என்கிற போது தம்பியை அழைக்க நினைத்த அதே நாளில் தம்பி போன் செய்தான்.
அட செம்ம சிங்குல இருக்காபுல.. என்று நினைத்துக் கொண்டேன்.
இம்முறை வேறு கதை. வேறு ப்ராஜெக்ட் என்பதால் அவரிடம் நாவலைக் கொடுத்து படித்துவிட்டு ரெண்டு நாட்கள் கழித்து வரச் சொன்னேன்.
வந்தார்.
“படிச்சீங்களா?”
“இல்லை சார்.. எனக்கு தமிழ்ல அத்தனை சீக்கிரம் படிக்க வராது. என் வைஃப் படிப்பாங்க.
அவங்க படிச்சி சொல்லச் சொல்லியிருக்கேன்” என்றார்.
“சரி படிச்சிட்டு வாங்க. அப்பத்தான் நாம பண்ணப் போற கதை அதன் பின்புலம் பற்றி
பேச முடியும்’ என்று சொல்லி கிளம்பச் சொன்னேன்.
“சார்.. ஷூட்டிங் எப்ப இருக்கும்?” என்று ஆர்வமாய் கேட்டார்.
நான் ஒரு மாதத்தை குறிப்பிட்டு “அப்ப ஸ்டார்ட் ஆக ப்ளான். சினிமா உங்களுக்கு
தெரியாதா? திடீர்னு உடனே கூட ஆரம்பிக்கலாம். நீங்க வர்ற மாசம் வேலையில ஜாயின் பண்ணிருங்க.” என்று
சொல்லிவிட்டு, குறைந்த பட்சம் பத்தாயிரம் என்னால் உறுதியாய் தயாரிப்பாளரிடமிருந்து
வாங்கி கொடுக்க முடியும். என்றேன்.
தம்பி சிறிது நேரம் யோசித்தார். “சார்.. டெய்லி பேட்டா?”
“அது ஷூட்டிங் போதுதான் தம்பி”
“ஒரு ரெண்டாயிரம் எக்ஸ்ட்ரா வாங்கித் தர முடியுமா?”
“நீங்க வந்து ஜாயின் பண்ணுங்க. பேசி வாங்கித் தரப் பாக்குறேன்” என்றேன். முதல்
படத்தில் கடைசி பல மாதங்கள் சம்பளமில்லாமல் தான் வேலைப் பார்த்திருந்ததாய் சொல்லியிருந்தார்.
“சரி சார்.. நான் ரெண்டு நாள்ல படிச்சிட்டு வந்திர்றேன்” என்று கிளம்பினார்
“தம்பி வேலைக்கு வர மாட்டாப்ல” என்றேன் என் அசோஸியேட்டிடம்.
“அப்படியா சொல்றீங்க?. தம்பி உங்க கிட்ட கத்துக்கணும்னு ஆர்வமா இருக்காப்புல.
ஒரு ரெண்டாயிரம் சம்பளத்துல என்ன வந்திரப் போவுது?” என்று சந்தேகமாய் கேட்க, “இல்லைங்க
அவரு வர மாட்டாரு” என்று உறுதியாக கூறினேன். இன்றுடன் இரண்டு மாதங்களாகிவிட்டது. அன்று
போனவர் இன்று வரை நான் வேலைக்கு வரவில்லை என்று கூட போன் செய்யவில்லை. நான் சொன்னேனில்லையா? அஸிஸ்டெண்டுகள் தனித்துவமானவர்கள்.
அவர்களை அத்தனை சீக்கிரம் கணிக்கவே முடியாதென்று.
Post a Comment
No comments:
Post a Comment