Thottal Thodarum

Oct 20, 2021

சாப்பாட்டுக்கடை - அப்புகுட்டி வெரைட்டி ரைஸ் - சாலிகிராமம்

கொரோனா எத்தனை விதமான அழிவை கொடுத்ததோ அதே அளவிற்கு புதிய நம்பிக்கைகளையும் கொடுத்துவிட்டுத்தான் போயிருக்கிறது. அதில் முக்கியமான சர்வைவல் நம்பிக்கை புதிய, சிறிய உணவகங்கள். கொரோனா காலங்களில் ஏகப்பட்ட சிறு, குறும் உணவங்கள், முக்கியமாய் பார்சல் மட்டுமே இருந்த காலத்தில் வருமானமில்லாமல் கஷ்டப்பட்ட ஏழை, நடுத்தர குடும்பங்கள் உணவு தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். நிறைய சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் உணவு பிஸினெஸ் ஆரம்பித்து வெற்றி நடை போடுவதை கண் கூடாக பார்க்கிறேன். நொந்து நூலாகிப் போனவர்களையும் பார்க்கிறேன். இந்தக்கடை கொரானா காலத்தில் மிகப் பிரபலமாய் பேசப்பட்டது. குறிப்பாய் உதவி இயக்குனர்களுக்கு வருமானமில்லாத காலத்தில் அம்மா உணவகமும், கைவிட்ட நிலையில் சகாய விலையில் நல்ல தரமான உணவு கிடைத்தால் அதை விட வேறு என்ன வேண்டும்?.

சாலிகிராமம். அருணாசலம் ரோடு. ப்ரசாத் ஸ்டூடியோ வாசலில் ஒரு குட்டி யானை வண்டியில் இவர்களது விற்பனை ஆரம்பமானது. கொரோனா காலம் இவர்களை பிரபலப்படுத்தியது. முப்பது ரூபாய்க்கு நல்ல எலுமிச்சை புளிப்போடு சிக்கன் தொக்கு, முட்டை தொக்கு தருகிறார்கள் என்று கேள்விப்பட்டு பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டோம். அட்டகாசமாய் இருந்தது. குறிப்பாய் சிக்கன் தொக்கு. அதிக காரமில்லாமல், நன்கு வெந்த சிக்கன். மசாலா என சிறப்பாய் இருந்தது. சாம்பார் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம்,தக்காளி சாதம் என எல்லா சாதங்களும் வெறும் முப்பது ரூபாய்தான். ஒருவர் நிம்மதியாய் சாப்பிடும் அளவிற்கு தரமான சேர்மானங்களுடன். கூட தொட்டுக் கொள்ள இவர்களது வித்யாசமான காம்பினேஷன் சிக்கன் தொக்கு. முட்டை தொக்கு. நாற்பது ரூபாய்க்கு ஒரு வெஜ் ரைஸும் உண்டு. வெஜ் ரைஸும், சிக்கன் தொக்கு காம்பினேஷன் அட்டகாசம். அதே போல தயிர் சாதத்துடனான முட்டை தொக்கு. 
இவர்கள் காலை பதினோரு மணி முதல் மதியம் மூன்று மணி வரை மட்டுமே விற்பனை செய்கிறார்கள். சமயங்களில் அதற்கு முன்பே காலியாகிவிடும். பார்சல் மட்டுமே. விலை குறைவாக இருக்கிறதே என்று இவர்களின் தரம் குறித்து யோசனை செய்ய வேண்டாம். நிச்சயம் நான் கேரண்டி.

அப்புகுட்டி வெரைட்டி ரைஸ்
அருணாசலம் சாலை
ப்ரசாத் ஸ்டூடியோ அருகில்
சாலிகிராமம்
ph: 9840697808

Post a Comment

No comments: