Thottal Thodarum

Nov 27, 2021

சாப்பாட்டுக்கடை - பிகானீர்வாலா

 சென்ற வாரம் நுங்கம்பாக்கம் பக்கம் போன போது  பிகானீர்வாலா கடையின் வாசலில் ஏகப்பட்ட வட இந்தியர்கள் கூட்டம் காத்திருந்தது. கார்கள் அணிவரிசை கட்டியிருந்தார்கள். வெஜிட்டேரியன் உணவகங்களில் வட இந்தியர்கள் க்யூ கட்டி நிற்கிறார்கள் என்றால் நிச்சயம் தரமானதான் தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. சாதாரணமாய் க்யு கட்ட மாட்டார்கள்.

அடுத்த ஒரு வார நாளில் சென்று பார்த்த போது அட்டகாசமான க்ரவுண்ட் ப்ளோர் டிஸ்ப்ளேவே கண்ணைக் கட்டியது. அத்தனை விதமான ஸ்வீட், கார வகைகள். கிலோ கணக்கில் ஏகப்பட்ட ஆபர்களோடு. ஒரு ப்ளோர் முழுக்க இந்த அயிட்டங்களுக்கு என்று ஒதுக்கியிருக்க, மாடியில் விஸ்தாரமான உணவகம்.

ரொம்பவும் விஸ்தாரமான மெனு இல்லை என்றாலும் இருக்கும் மெனுவில் சோளாபூரியை ஆர்டர் செய்தேன். அட்டகாசமான ரெண்டு பூரிக்களோடு சென்னா, பன்னீர் மற்றும் உருளைப் போட்டு கொடுத்தார்கள். அட்டகாசமான சுவை. கூடவே தொட்டுக் கொள்ள பிகானீர் ஊறுகாய். 

ப்ளேட்டர் மீல்ஸ் தருகிறார்கள். அதில் ஒரு ஸ்வீட், ஒரு ரைஸ், மூன்று சப்ஜிக்கள், ஒரு ரைத்தா, ஒரு அப்பளம், மூன்று ரொட்டிக்கள், எல்லாம் சேர்த்து 370 ரூபாய். கொஞ்சம் அதிகம் தான்.

பாவ் பாஜியும் நல்ல தரத்துடன் வெண்ணையில் புரட்டித் தந்தார்கள். என்னைப் பொறுத்த வரை பாவ் பாஜி என்றால் நார்த் மெட்ராஸ் ஏரியாவில் இருக்கும் நாவல்டியில் கிடைக்கும் பாவ் பாஜிக்கு இணை இன்னும் நான் டேஸ்ட் செய்யவில்லை. பட்.. இவர்களீன் பாவ் பாஜி நன்றாகவே இருந்தது. நல்ல வெஜிட்டேரியன் உணவு மற்றும் ஸ்வீட் கார வகைகள் வேண்டுவோர் நிச்சயம் ஒரு முறை இங்கே வைக்கப்பட்டிருக்கும் டிஸ்ப்ளேவுக்காகவே போய் வரலாம். சனி ஞாயிறுகளில் கூட்டம் அதிகம். 

Nov 7, 2021

சாப்பாட்டுக்கடை - மஞ்சள்


இதே பெயரில் சில வருடங்களுக்கு முன்னால் கோடம்பாக்கம் ஐந்து விளக்கு அருகில் ஒரு பழைய வீட்டில் உணவகமொன்றை ஆரம்பித்திருந்தார்கள். பின்பு சில மாதங்களில் அது காலியாகிப் போக போன மாதம் ரஷ்யன் கல்சுரல் அருகில் போக வேண்டியிருக்க, அப்போதுதான் பார்த்தேன். ஏகப்பட்ட கார்களும், வாசலில் நிறைய பேர் காத்திருந்தார்கள். சரி வேறொரு நாள் போய்க் கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டேன். திபாவளிக்கு அடுத்தநாள் அந்த ஏரியாவில் ஒரு மீட்டிங். மதிய உணவுக்கு அங்கே போகலாம் என்று நண்பரிடம் சொன்னேன். “நீங்க அங்க சாப்ட்டு இருக்கீங்களா?” என்று கேட்டார். இல்லை இன்னைக்குத்தான் ட்ரை பண்ணப் போறேன் என்று சொல்ல, அப்ப நீங்க சாப்டு சொல்லுங்க நான் வீட்டுக்கு கிளம்புறேன் என்று கிளம்பிவிட்டார். போன போது வழக்கம் போல வாசலில் கூட்டம் நின்றிருந்தது.  உள்ளே போய் பெயரைக் கொடுத்துவிட்டு வரலாம் என்று போன போது ஒரு சீட்தானே இருக்கு என்று உடனடியாய் இடம் ஏற்பாடு செய்ய.. சிறிது நேரம் கழித்து ஆர்டர் எடுக்க ஆளை கூப்பிட்டு வரச் சொல்ல வேண்டியதாய் போனது. 


முணியாண்டி விலாஸ் பாணியில் பெரிய நான்வெஜ் அயிட்டங்களின் தட்டை நம் முன் வைத்து இதில் எது தேவை என்று லிஸ்ட் போட்டார்கள். சிக்கன் ப்ரை, மட்டன் சுக்கா, எறா தொக்கு ஆகியவை உணவுடனே வந்து விடும் என்றதால் ஒரு ப்ளேட் கோலா உருண்டை மட்டும் ஆர்டர் செய்தேன். பரபரவென அடுத்தடுத்தாய் உணவை வைத்துவிட்டு, குழம்பு என்ன வேண்டுமென கேட்க, மட்டன் குழம்பு என்றேன். நன்கு கெட்டியாய், நல்ல மிளகின் காரத்தோடு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டேன். மிகவும் நன்றாய் இருந்தது., அடுத்ததாய் சிக்கன் குழம்பு. மட்டனின் சிறப்பிற்கிடையே அஹா என்று சொல்ல முடியாவிட்டாலும் குட். அடுத்ததாய் மீன் குழம்பு. மீன் குழம்பில் புளிப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வது வழக்கு என்றாலும் அதீத புளிப்பினால் கொஞ்சம் ஏமாற்றமே அளித்தது. கோலா உருண்டை நன்கு பெரிதாய் தான் இருந்தது. மட்டனின் எலும்புத் துண்டுகளில் இருக்கும் சிறு சிறு துளிகள் அதில் கலந்திருந்ததால் அவ்வப்போது பல்லில் இடறியதால் கொஞ்சம் எரிச்சல் வந்தது என்றாலும் நன்றாகவே இருந்தது.  ரசம் மிகச் சுமார் தான். மற்றபடி கொடுத்த சைட்டிஷ்களில் மட்டன் சுக்காவும் சிக்கன் ப்ரையும், மிக நன்று. எறா தொக்கு கொஞ்சம் வழக்கத்தை விட இனிப்பாய் இருந்தது. மற்றபடி தயிரின் புளிப்பு கொஞ்சம் ஓவரே.. கட்டங்கடைசியாய் ஒரு கேரட் அல்வா கொடுத்தார்கள். நன்று.  மதிய லஞ்சின் விலை மூன்று நான்வெஜ் கிரேவி, மற்றும் சைட் டிஷ்சோடு 475 ரூபாய். ஒரு மட்டன் கோலா 150, அதிகமென்று சொல்ல முடியாவிட்டாலும் திருப்தியான விலையென்று சொல்ல முடியவில்லை. நிச்சயம் ஒரு முறை ட்ரை செய்யலாம். டிவைன் வகைகளினுள் ஏதுவும் இல்லை என்பது வருத்ததுக்குரியதே.. 

Manjal 

17/4, Kasthuri Estate,

Gopalapuram 1st St, Poes Garden,

Chennai, Tamil Nadu 600018

opp to ente keralam