Facebook சினிமாக்கள்
அதென்ன பேஸ்புக் சினிமாக்கள். சினிமா எல்லாருக்குமானதுதானே? என்று கேட்பீர்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. சோஷியல் மீடியாவுக்கென தனி சினிமா இருக்கிறது. அங்கு பாராட்டு பெற்றாலே அது வெற்றிப் படம் என்று இறுமாந்து மார் தட்டிக் கொள்ளும் கூட்டம் உருவாக ஆரம்பித்துவிட்டது. பேஸ்புக் சினிமாக்கள் ஷோஷியல் மீடியாவில் மட்டுமே பாராட்டு பெறும். வெகு ஜனங்களிடையே பெயர் தெரியாமல் போகக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமுள்ள திரைப்படங்களின் வரிசையில் இந்த பேஸ்புக் படங்கள் தான் முன்னிலை வகிக்கும். ஜாதி சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் ஒரு விஷம் என்று கருத்து சொல்கிற, ஒடுக்கப்பட்டவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற கூட்டத்தினர் கூட அவர் சாதி ஆட்களீன் படங்களை அது எப்படி இருந்தாலும் கொண்டாடும் மனோவியாதியை பேஸ்புக் படங்கள் கொண்டிருக்கும்.
சமீபத்தில் ஒரு பிரபல எழுத்தாளுர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது “வர வர ஸ்பெஷல் எழுத்தாளர் ஷோன்னா ஜன்னி வர ஆரம்பிசிருது. வெளிய வந்து உண்மைய சொல்ல முடியறது இல்லை. அப்படியே சொன்னா வீணா விரோதம் தான் வருது. அதுனால ஒரு வருஷமா நான் எந்த விதமான ஸ்பெஷல் எழுத்தாளர் ஷோவுக்கு போறதில்லை” என்றார்.
அறிவுசார் கூட்டத்திலிருந்து பாராட்டுக்களை பெற்றால் எலைட் ஆடியன்ஸுகளிடம் போய் சேரலாம் என்கிற மித் இம்மாதிரியான “பேஸ்புக்படங்கள்” எடுக்கும் நண்பர்களிடம் உருவாகியிருக்க, இன்னொரு பக்கம் என்னடா படம் வர்றதுக்குள்ளேயே பதினாறு பக்கம் பாராட்டி எழுதுறாங்களே என்று சாதாரண சினிமா ரசிகன்கள் முன்பு ஏமாந்த அனுபத்தை மனதில் இருத்திக் கொண்டு இப்போதெல்லாம் எஸ்ஸாக ஆரம்பித்துவிடுகிறார்கள் என்பதை இன்னமும் அறியாமல் ஷோ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான ஒரு ஸ்பெஷல் ப்ரிவீயூவில் பார்த்த ரெண்டு படங்களைப் பற்றிய கருத்துக்களை சொல்லத்தான் இந்த கட்டுரையே. முதல் படம் கடைசி விவசாயி. படம் பார்க்க ஆரம்பித்த போது டைட்டில் காட்சியிலேயே “கற்பனை என்றாலும்” என்று பழைய டி.எம்.எஸ் குரலைக் கேட்டதும் ஜிவ்வென்றுதான் இருந்தது. படம் ஆரம்பித்து சிறிது நேரம் போக, போக ஒளி, ஒலி பதிவுகளின் நேர்த்தி அட போட வைத்தது. லைவ் ரிக்கார்ட்டிங் என்பதால் நடிக்கிறவர்கள் உணர்வோடு பேச, அது அவர்களின் சிறந்த நடிப்பின் வெளிப்பாடாய் பாராட்டியவர்கள் ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் இது ஒரு வாழ்வியல் படம் என்று சொல்லி பாராட்ட ஆரம்பித்தார்கள். எங்க தாத்தாவை பார்த்தார் போல இருக்கிறாது. எங்க கிராமம் நினைவுக்கு வந்துவிட்டது. விஜயசேதுபதி கேரக்டர் போல எங்க ஊரில் ஒருத்தர் இருந்தார். என்று ஆளாளுக்கு தங்கள் நாஸ்டால்ஜிக்களை கிளறி விட்டு கொண்டபடி தங்களை ஒரு விவசாயி, வாழ்க்கையின் காதலன் என்றெல்லாம் அவரவர்கள் போஸ்டுகளில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு ஆரம்பத்தில் படம் பிடித்த அளவுக்கு போகப் போக பிடிக்காமல் போய்விட்டது. பிடித்ததற்கான காரணம் இவர்கள் பாராட்டிய இயல்பு வாழ்க்கைக்கு மிக அருகில் இருந்த காட்சிகளால், பிடிக்காமல் போனதற்கான காரணம் அந்த இயல்பிலிருந்து சினிமாவாக விலகி காட்சிகள் தொடர்ந்ததால். அதாவது தாத்தாவின் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கும் என்று மாஜிஸ்ரேட்டுக்கு தெரிந்துவிட்டது. அவர் ஆல்மோஸ்ட் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார். அல்லது விடலாம். ஆனால் அப்படி செய்துவிட்டால் கதைப்படி அவரை ஜெயிலில் வைத்து விவசாயின் விவசாயக்காதலை, இயற்கையின் மீதுள்ள காதலை வெளிப்படுத்த முடியாது என்று இயக்குனரும் எழுத்தாளரும் நினைத்ததினாலோ என்னவோ, என்பது வயது முதியவரை முப்பது நாள் சிறைவாத்திற்கு உத்தரவிடுகிறார். இங்கே சினிமாவாக ஆரம்பித்தது மெல்ல ஒட்டாமல் போய்விட்டது. ஆனால் கமர்ஷியல் படங்களில் ஊரில் உள்ள அத்தனை லாஜிக்குகளையும் கேள்வி கேட்டு உருட்டுகிறவர்கள், இம்மாதிரியான படங்களில் அதை கவனித்தாலும் சொல்ல மாட்டார்கள். ஊரில் உள்ள பேஸ்புக் அறிஞர்கள் எல்லோரும் பாராட்டும் படத்தை குறை சொன்னால், அவர்களை ஆட்டத்திலிருந்து விலக்கி விடுவார்களோ என்கிற பயம் தான் காரணம்.
இப்படி கண்மூடித்தனமாய் பாராட்டும் கூட்டம் ஒன்று என்றால் இன்னொரு பக்கம் எவன் பாராட்டினா என்னடா? நான் அதை மறுக்கிறேன் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களின் டார்கெட் வேறு. எல்லாவற்றிலும் சமூதாய நோக்கு, சமூக நீதி, பெரியார், அம்பேத்கார் எல்லாரையும் தேடுவார்கள். புரட்சி ஒன்றே இவர்களை தனித்து அடையாளப்படுத்தும் என்று உறுதியாய் நம்புகிறவர்கள்.
இப்படியானவர்களை சமீபத்தில் என்ன எழுதுவது என்று யோசிக்க வைத்தப்படம் “குதிரைவால்”. குதிரைவால் படம் ஒரு அப்ஸ்ட் ராக்ட் ஓவியம் என்று எழுதியிருந்தேன். ஒரு பத்திரிக்கையாளர் தொலைபேசி அப்படின்னா என்னா? என்று கேட்டார். விளக்க வேண்டியதாய் போயிற்று. அவர் அப்படி கேட்டு தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் பெரும்பாலான கூட்டம் அப்படி ஏதாச்சும் கேட்டுவிட்டால் தங்கள் அறிவாளிதனம் தெரிந்துவிடுமோ என்று அஞ்சி கேட்காமல் ஆமாம் அப்ஸ்ட் ராக்ட் ஓவியம் என்று வழிமொழிவதுதான் மிகவும் ஆபத்தான விஷயம்.
அப்படி கருத்தே சொல்ல முடியாத ஒரு படமாய் குதிரைவால் வந்தது சந்தோஷமாய்த்தான் இருந்தது. காரணம் குதிரைவால் படம் இதுவரை இவர்கள் பார்த்த இலக்கிய, நான் இலக்கிய, கமர்ஷியல் படங்களைப் போல இல்லை. முழுக்க, முழுக்க, மேஜிக்கல் ரியலிசத்தை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்டு, படமாக்கப்பட்டிருக்கும் படம். என் நினைவு தெரிந்து இதற்கு முன்னால் இப்படியான திரைமொழியை தமிழில் பயன்படுத்திய படம் கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தில்தான். இத்தனைக்கும் அப்படம் குதிரைவால் போல அத்தனை காம்பளிக்கேட்டான திரை மொழியில் எடுக்கப்படாத படம் அதுவே பல பேருக்கு பிடிபடாமல் இருந்தது. இயற்கையாய் படமெடுக்கிறேன் என்று சொல்லி இயல்பை மீறிய காட்சிகளை வலிந்து திணித்த படங்களை விட, கற்பனைக்கு எட்டாத கதையை புதிய திரைமொழியில் சொல்ல விழைந்தது பாராட்டுக்குரியதுதானே?.
ஒரு நண்பர் எனக்கே புரியலை என்றார். இன்னொரு நண்பர் இதை புரிந்து கொள்ள உலக சினிமா அறிவு வேண்டும் என்கிறார். இதெல்லாம் ஒரு படம்னு எவன் எடுத்தான் என்கிறார் இன்னொருவர். இப்படியான படங்களைப் பார்க்க தனி அறிவு வேண்டும். ரசனை வேண்டும் என்கிறார் ஒருவர். எனக்கென்னவோ இவர்களின் கூற்றுக்களைவிட ஏதோ ஒன்றை வேறு விதமாய் சொல்ல விழைந்திருக்கிறார்கள். அதில் ஒரு டெம்ப்ளேட் இல்லை. நேர்மை இருக்கிறது. அது யாருக்கு பிடிக்கிறதோ அவர்களுக்கு பிடிக்கட்டும் என்கிற தைரியம் இருக்கிறது. அதுதான் இந்தப்படத்தின் வெற்றி. இரண்டு படங்களுமே கமர்ஷியல் வெற்றியை பெறவில்லை. பெறவும் பெறாது. ஏனென்றால் இவைகள் பேஸ்புக்குக் சினிமாக்கள்.
Post a Comment
No comments:
Post a Comment