தோசை மாமா கடையைப் பற்றி "வேற லெவல்" கடை என்று வீடியோ போடாத ஃபுட் ரிவ்வியூவர்களே கிடையாது என்று சொல்லலாம். அதோடு அங்கே சாப்பிடச் சென்றால் பெரிய க்யூவில் நிற்க வேண்டும். க்யூவைத் தாண்டி அவர் அப்படி சமைப்பார். இப்படி சமைப்பார். செம்ம சுவை என்றெல்லாம் வீடியோவில் சொல்லாத ஆள் இல்லை. அவரின் கடையில் க்யூவே இல்லாத காலத்திலேயே நான் சாப்பிட்டிருக்கிறேன். அத்தனை கூட்டமெல்லாம் இருக்காது.
கூட்டத்திற்கு காரணம் அவரின் தோசை தயாரிப்பு முறைதான். அவரே தோசை மாவு கரைப்பார். அவரே தோசை ஊற்றுவார். அவரே பொடி எல்லாம் போடுவார். அவரே எண்ணைய் ஊற்றுவார். அவரே பார்சலுக்கு பணம் வாங்குவார். அவரே தோசை சுட்டு அதை ப்ளேட்டில் வைத்து சாம்பார் சட்டினி எல்லாம் ஊற்றி கொடுப்பார். அவரே சாப்பிட்ட தட்டுக்களை கழுவி வைப்பார். அது மட்டுமில்லாமல் பத்துக்கும் மேற்பட்ட வகை தோசைகள் வைத்திருப்பார். அதனால் இன்னும் அதற்கான பிரிபரேஷன்கள் ஒவ்வொரு தோசைக்கும் மாறுபடும் பட்சத்தில் நேரம் எடுக்கத்தான் செய்யும். இத்தனைக்கும் க்யூவில் வரவில்லையென்றால் கொடுக்க மாட்டார். கொஞ்சம் முகம் காட்டுவார். இத்தனையும் அவரே செய்வதால் நேரம் ஆகத்தான் செய்யும். கூடவே யூட்யூபர்களின் வருகை அவருடய கடைக்கு ஆட்களை அதிகம் பேர் கொண்டு வர, க்யூ பெரிதானது. காத்திருப்பு நேரம் அதிகமானது. அவருடய உழைப்பும் அதிகமானது. வருமானம் அதிகம் ஆகியும் அவர் ஆட்களை போட்டுக் கொள்ளாமலேயே கடை நடத்தினார். இன்னும் கூட்டம் அதிகமானது. ஒன்பதரை பத்துக்கு பிறகு இத்தனை பேருக்கு மேல் தோசை கிடையாது என்று சொல்லி திரும்பி அனுப்பும் அளவிற்கு பிஸினெஸ் வளர்ச்சி ஆனது. சில யூட்யூப்களில் பேட்டி எல்லாம் கொடுத்தார் மாமா. ravichandran என்கிற அவரின் பெயரே தோசை மாமா ஆனது. இந்த வளர்ச்சி தான் அவரை கீழே விழச் செய்ததும் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அவரின் தோசையின் டேஸ்ட் என்று சொல்லப் போனால் அத்தனை சிலாக்கியமான தோசையெல்லாம் இல்லை. வேறே லெவல்.. வேற லெவல் என்று சொல்லிய தோசையை அரை மணி நேரம் காத்திருந்து சாப்பிட்டதும் அதை நல்லா இல்லை என்று சொன்னால் நம்மை ஃபுட்டி லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்கிற ஆதங்கத்தீல் அவர்கள் பாராட்டித் தொலைப்பார்கள். ஆனால் மாமாவின் தோசை சாதாரண கையேந்தி பவன் தோசைக்கு எந்தவிதமான குறைவுமில்லாத தோசை தான். அதிலும் பொடி எல்லாம் போட்டு சல்லீசான விலையில் வீட்டு தோசைக்கு நிகராய் இருக்கும்.
இவரிடம் போய் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த வண்டி கடையிலேயே இருப்பீங்க? என்று யாரோ சொல்லி விட்டிருப்பார்கள் போல. தள்ளுவண்டிக்கடையை ஏறக்கட்டிவிட்டு, சாலிகிராமத்தில் தோசை மாமா கொஞ்சம் பெரிய உணவகமாய் திறந்தார். நல்ல விஷயம் தானே.. எத்தனை நாள் தள்ளுவண்டிக் கடையாகவே இருப்பது. நல்லதுதான் ஆனால் சில கடைகள் சின்னதாய் இருக்கும் பட்சத்தில் மட்டுமே வேலைக்காகும். பெரிதாய் ஆக, ஆக அதன் மேல் உள்ள ஈர்ப்பு குறைந்து நத்திங் ஸ்பெஷல் இல்லை என்பது தெரிந்துவிடும். அப்படியானது இவர்களது தோசை மாமா தோசை கடை இன் சாலிகிராமம். சாலிக்கிராமத்தில் ஆரம்பித்த சில நாட்களிலேயே மேற்கு மாம்பலத்தில் இன்னொரு சின்ன கிசோக்ஸ் கடை ஒன்று திறந்தார்கள். என்னாடா அதுக்குள்ள ரெண்டு கடையா? என்று ஆச்சர்யப்பட்டேன். கடை ஆரம்பித்த நாட்களில் ப்ராண்ட் அம்பாசிட்டர் போல கடையில் நிற்க வைத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் வழக்கம் போல நார்த் ஈஸ்ட் ஆட்கள் தோசை போட ஆரம்பித்தார்கள். 30ரூபா தோசை 60 ஆனது. பின்பு சாலிகிராமத்தில் அவரை காண்பது அரிதானது. சரி ஒரு வேளை மேற்கு மாம்பலம் கடையில் இருப்பாரோ என்று கேட்ட போது அவர் இப்போது வருவதில்லை ஆனால் அவரது ரெஸிப்பி தான் ஃபாலோ செய்கிறோம் என்றார்கள். சிரித்தேன். அவரது ரெசிப்பியே சிங்கிள் மேன் ஷோதான். அதுதான் ஸ்பெஷல். என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு கிளம்பினேன். தோசை மாமாவின் தோசையை விட வெகு சுமாராய் இருந்தது. யாரோ இவரை ப்ராண்டாய் வைத்து காசு பார்க்க ஆசைப்பட்டு இவரை போட்டு பார்த்துவிட்டார்கள் என்றே தோன்றியது. வெகு சீக்கிரத்திலேயே சாலிக்கிராமம் மற்றும் மேற்கு மாம்பலம் கடைகள் மூடப்பட்டது.
மீண்டும் தோசை மாமா அதே தள்ளுவண்டிக்கடையில் ஆரம்பித்துவிட்டார் அவரது அயராத உழைப்பை. முன்பு அளவிற்கு கூட்டமெல்லாம் இல்லை. சகாய விலை. அயராத உழைப்பு. நத்திங் ஸ்பெஷல் இல்லையென்றாலும் அவரது உழைப்புத்தான் ஸ்பெஷல் என்பதால் மக்களின் அன்பு அவரை தோசை மாமா ஆக்கியது. தோசை உள்ளவரை தோசை மாமாவின் பெயர் நிலைக்கும்.
Post a Comment
No comments:
Post a Comment