Thottal Thodarum

Jun 29, 2023

சாப்பாட்டுக்கடை - உபவிஹார் - அண்ணாநகர்

 பென்ன தோசை சாப்பிடுவதற்காக கோவா செல்லும் வழியில் ஓர் ஊரில் இரவு தங்கி, விடியற்காலையில் அந்த ஊர் பென்ன தோசைக்கு பேமஸ் என்பதால் முதல் தோசையை சாப்பிட்டு கிளம்பிவர்கள் நாங்கள். அப்படியான பென்னை தோசை சென்னையில் கிடைக்கிறது என்று கேள்விப்பட்ட போது கண்களில் அந்த செந்நிறமாய் மடிக்கப்பட்ட தோசை கண் முன் நிழலாடியது. கர்நாடக பென்னை தோசைக்கு உள்ளே வைத்துத் தரும் மசால் இன்னொரு சுவாரஸ்யம் என்றாலும் தோசையின் மேல் வெண்ணையை வைத்து அது உருகிய பின் பிய்த்து சாப்பிடும் சுவை இருக்கிறதே அட அட அட..  அப்படியான ஒரு தோசை சென்னையில் கிடைக்கும் இடம் எது என்று தேடியதில் பெங்களூர் டிபன் செண்டர் என்று ஒன்றைப் பார்த்தோம் படு திராபையான உணவு. கூடவே தண்ணி பாட்டில் வாங்க சொல்லி திட்டு வாங்கிக் கொண்டார்கள். தொடர் தேடல் புதிதாய் ஒரு கடை அண்ணாநகரில் திறந்திருக்கிறார்கள் என்றதும் வண்டியை விட்டோம்

அண்ணாநகர் டவர் பார்க் மெட்ரோ பார்க்கிங்கில் தான் கடை ஆரம்பித்திருக்கிறார்கள். சின்னக் கடை தான். ஏகப்பட்ட கூட்டம். டிபிக்கல் கர்நாடக அயிட்டங்களை வகைப்படுத்தியிருந்தார்கள். தட்டே இட்லி, கார பாத், பிஸிபேளா பாத், பூரி, பென்னே தோசை, மசாலா பென்னே தோசை என இருபதுக்கும் மேற்பட்ட அயிட்டங்கள். பில் போட பெரிய க்யூ நின்றது. அதே நேரத்தில் பரபரவென அயிட்டங்கள் டெலிவரியும் ஆகிக் கொண்டிருக்க, நாங்களும் க்யூவில் நின்றோம். ஒரு பென்னை தோசை, கார பாத் ஆர்டர் செய்தோம். தோசைக்கு டோக்கை கொடுத்துவிட்டு, காரபாத்தை உடனே கொடுத்தார்கள். டிபிக்கல் தித்திப்பு சாம்பார். கார சட்னியும் தேங்காய் சட்னியும் கொடுத்தார்கள். கார பாத் ஆஸ் யூஸுவல் பெங்களூரில் சாப்பிட்டது போல இருந்தது. சிறிது நேரம் கழித்து டோக்கன் நம்பர் சொல்லி கூப்பிட்டு பென்ன தோசை கொடுத்தார்கள். பார்ப்பதற்கே கவர்ச்சிக் கன்னி போல இருந்தது தோசை. நல்ல ரோஸ்டாகி, பென்னை மேலே பளபளவென தெரிய, க்ரிஸ்பான பென்னெ தோசை. அபாரமான சுவையோடு இருந்தது.

மற்றொரு நாள் அதே பென்னை தோசையோடு, பிஸிபேளாபாத் ஆர்டர் செய்திருந்தோம். பிஸிபேளாபாத் என்றால் நம்மூரில் சாம்பார் சாதத்தை தருவார்கள். அதையே சாம்பார் சாதம் என்றும், பிஸிபேளா பாத் என்று அழைப்பார்கள். இரண்டிற்கு ஆறு வித்யாசமில்லை. ஒரு வித்யாசம் கூட இருக்காது. கொஞ்சமே கொஞ்சம் சமைக்க தெரிந்தவன் பிஸிபேளாவில் கொஞ்சம் தனியா அள்ளிப் போட்டிருப்பான் அவ்வளவுதான். ஆனால் இவர்களது பிஸி பேளா கெட்டியாகவும் இல்லாமல், தண்ணீராகவும் இல்லாமல் அட்டகாசமான மிக்ஸரில் இருக்க, சுவை ஆஸ்யூஷ்வல் தித்திப்பு சுவையோடு, கர்நாடக பிஸி.  இன்னமும் ரவா தோசை சாப்பிடவில்லை. செளசெள பாத் சாப்பிடவில்லை. விரைவில் அதையும் ஒரு கை பார்த்துவிடுவோம். என்ன க்யூவில் நிற்க தயாராக வேண்டும். அதே போல சாப்பிட இரண்டே இரண்டு டேபிள்கள் தான் அதுவும் நின்ரு கொண்டு சாப்பிடும் முறையில் இன்னும் நான்கைந்து டேபிள்கள் போடலாம். நல்ல தரமான சுவையான டிவைனான கர்நாடக திண்டிக்கு "உபவிஹார் அண்ணாநகர்


Post a Comment

No comments: