Thottal Thodarum

Jul 1, 2023

சாப்பாட்டுக்கடை - குக்கிராமம்

 குக்கிராமம். பெயரே வித்யாசமாய் இருக்க அண்ணாநகரில் இருக்கிறது என்றார்கள். முழுவதும் ஆர்கானிக் உணவு மட்டுமே என்றிருக்க முதல் பயமே விலை வச்சி செய்யப் போறாங்க என்பதுதான்.  இடம் ஒரு சின்ன பார்க் போல இருந்தது. ஒரு பழைய பில்டிங்கில் உள்ளே ஆர்கானிக் பொருட்களின் ஸ்டோராகவும், வெளியே உணவகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. உள்ளே நுழையும் முன்னே வாசலில் ஒரு கோயில் மணி தொங்க விட்டிருந்தார்கள். வழக்கமாய் பிட்ஸா கடைகளில் தான் இம்மாதிரி பாத்திருக்கிறேன். போகும்போது உணவும், உங்க பரிமாறலும் நன்றாக இருந்தது என்று மெட்டபராய் சொல்ல வைத்திருப்பார்கள். அது போல இங்கேயும் தொங்குகிறதே? என்று ஆச்சர்யமாய் உள்ளே போனேன். 

மெனு லிஸ்ட் எதிர்பார்த்ததை விட பெருசாகவே இருந்தது. முதலில் ஏதாவது ஸ்டார்டரிலிருந்து ஆரம்பிப்போம் என வெங்காயப்பூ ப்ரையில் ஆரம்பித்தோம். நல்ல ஆர்கானிக் வெங்க்கயத்தை போட்டு கிரிஸ்பியான ரிங்க் பக்கோடா வெங்காயம் வாயில் வைத்தவுடன் கரைந்ததால் அடுத்ததாய் புடலங்காய் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஆர்டர் செய்தோம். புடலங்காயை எப்படி அத்தனை சுவையாய் செய்ய முடியும் என்று தெரியவில்லை. நீர் சத்து உள்ள காய் அதை வெங்காயப்பூ போல போட்டுக் கொடுத்ததும் அருமையாய் இருந்தது.

அடுத்ததாய் இட்லி தக்காளி நல்லெண்ணெய் குழம்பு ஆர்டர் செய்திருந்தோம். நல்ல ஆர்கானிக் தக்காளியோடு, அது நாட்டுத்தக்காளியாய் இருக்கும் போல நல்ல புளிப்பும் அதே நேரத்தில் கொஞ்சம் காரமும் சேர்ந்திருக்க, மொத்த குழம்பையும் ஆர்கானிக் நல்லெண்ணெய்யில் சமைத்திருந்தார்கள். குழம்பு இட்லியில் ஊறியிருக்க, மெல்ல தக்காளி மற்றும் நல்லெண்ணெய் மணமும் நாசியில் ஏற அட்டகாசமான ஒரு அனுபவத்தை கொடுத்தது. நல்லெண்ணெய்ய்யின் சுவை அடடா

பூரி என மில்லட் பூரி வகைகள் வைத்திருந்தார்கள். வழக்கமான பூரிக்கு கொடுக்கும் கிழங்குதான். மில்லட் பூரி என்பதைத் தாண்டி ஒன்றும் பெரிதாய் பீல் செய்ய முடியவில்லை. மில்லட் அடை அட்டகாசமாய் இருந்தது.  சைசில் சின்னதாய் இருந்தாலும் சுவையில் பெரிதாய் இருந்ததும் நான்கைந்து சட்னி வைகள் மற்றும் அவியலோடு தந்தார்கள். நல்ல சுவை. அண்ட் க்ரிஸ்பி ஆல்சோ

விதவிதமான மில்லட் தோசைகள் நிறைய மசாலா மிக்ஸ்க்களோடு தருகிறார்கள். ஏனோ எனக்கு தோசை வகைகளை சுவைத்துப் பார்க்க விருப்பம் வர வில்லை. அதற்கு காரணம் விலை என்பதாய் கூட இருக்கலாம். 120 லிருந்து 170 வரை வைத்திருக்கிறார்கள். நிச்சயமாய் நல்ல தரமான உணவை தருகிறார்கள். எல்லா அயிட்டங்களிலும் பெஸ்ட் தக்காளி ந்ல்லெண்ணெய் குழம்பு தான். டிவைன். கிளம்பி வரும் போது வாசலில் தொங்கிய மணி அடிக்க கை தானாகவே  நீண்டு கயிற்றைப் பிடித்து அடித்தது. 




Post a Comment

No comments: