கொரோனாவால் இழந்த ஒரு பெரிய உணவு அனுபவம் எது என்றால் அது திருநெல்வேலி தோசைக்கடையின் எண்ணெய் தோசையைத்தான்.சாலிகிராமத்தில் பரணி ஸ்டூடியோ எதிரில் சின்னதாய் ஒரு கடை இருக்கும். அங்கே சாப்பிடவென ஒரு சிறு கூட்டம் எப்பவுமே இருக்கும். அது கொரோனா காலத்தில் இல்லாமல் போய் பின் திறந்து மெட்ரோ வேலைக்காக மூடி தற்போது மேப்படுத்தப்பட்ட விரகடுப்பில் அதே திருநெல்வேலி தோசைக்கடை. அப்படி ஒன்றும் பெரிய மெனு இருக்காது. தோசை, எண்ணெய் தோசை, அடை, வெங்காய தோசை, பொடி தோசை.மசால் வடை அம்புட்டுத்தான்.
எண்ணெய் தோசையில் ஆரம்பிப்போம். விரகடுப்பில் போடப்பட்ட கல்லில் தோசை மாவு ஊற்றப்பட்டு, அது நமக்கு பரிமாறுகையில் நல்லெண்ணெய் மினுமினுப்போடு, மேலே ஒரு கரண்டி கெட்டி தேங்காய் சட்னியோடு பரிமாறுவார்கள். எண்ணெய் தோசையின் டேஸ்ட் நிச்சயம் நீங்கள் இதற்கு முன்னால் ஹோட்டல்களில் தோசை சாப்பிட்டிருந்தீர்களானால் அது இதற்கு முன் கிட்டே கூட நிற்க முடியாது. வீட்டில் கூட இப்படியான தோசைகள் தற்போது கிடைப்பதில்லை என்று ரெடிமேட் தோசை மாவு குடும்பங்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதிகம் முறுகல் இல்லாத, ஆனால் அதே நேரத்தில் நடுவில் லேசான எண்ணெய் முறுகலோடு ஒரு தோசை. அதற்கு கொடுக்கப்படும் தேங்காய் சட்னி அதைப் பற்றி ரெண்டு வரி தனியே சொல்லியே ஆகவேண்டும். தேங்காய் சட்னி என்றால் இனிக்க இனிக்க சட்னி சாப்பிட்டிருப்பீர்கள். பச்சை மிளகாய் வாசனையோடு காரமான தேங்காய் சட்னி சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இவர்கள் கொடுக்கும் சட்னி வித்யாசமாய் இருக்கும் குறிப்பாய் முழுதாய் அறைக்கப்படாத தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் திப்பிலி திப்பில்யாய் தான் இருக்கும். ஆனால் எண்ணெய் தோசையுடனோ? அல்லது அடையுடன் சாப்பிட்டால் கூட அந்த தேங்காய் சட்னிக்கு மட்டுமே நாலு தோசை உள்ளே போகும். இதன் கூடவே காரச்சட்னி தருவார்கள். அது வேற லெவல் டேஸ்டாய் இருக்கும். குறிப்பாய் சட்னியோடு ஒரு விள்ளல் தோசையை அனுப்பினோமானால் நடு நாக்கில் லேசாய் சுர்ரென ஆரம்பிக்கும் காரம் அத்தனை ஆர்காஸமாய் இருக்கும் என்று சொன்னால் மிகையாகாது.
வெங்காய தோசை என்றால் அதன் விஷேஷமே பொடிப் பொடியாய் நறுக்கிய வெங்காய்த்தோடு தோசை. எண்ணெய் தோசை என்பதாலும், விரகடுப்பு என்பதாலும் வெங்காயம் கிரிஸ்பியாய் எண்ணெயில் ஃப்ரை ஆகி, சட்னிக்களுடன் சாப்பிட ஆரம்பித்தால் ரெண்டாவது போகாமல் விடாது.
அடுத்த பொடி தோசை. உளுத்தம் பருப்பு, கலந்த மிளகாய் பொடி. பொடி தோசை என்றால் ஏதோ சிகப்பாய் ஒரு பொடியை தோசை மீது தூவி காரமும் இல்லாமல் உப்பு உரைப்பும் இல்லாம ஒரு தோசை இருக்குமே என்று நினைப்பீர்கள். ஆனால் இவர்கள் தோசையின் மேல் பொடி போடும் போதே லேசாய் கமரும். அப்படியான நல்லணெய் தோசை, பொடியை தோசை முழுவது ஸ்பிரட் செய்து தரப்படும் தோசையும், தேங்காய் சட்னியும் ஒரு விள்ளல் சாப்பிட்டால் டிவைன் தான்.
அடை முறுகலும், இல்லாமல், கெட்டியாகவும் இல்லாமல், வெங்காயம் போட்ட அடை. அடை என்பது என்னைப் பொறுத்தவரை தட்ட வேண்டிய அயிட்டம். சரவணபவன் காலத்திற்கு பிறகு அதை தோசையாய் ஊற்றிக் கொடுக்க ஆரம்பித்த போதே அதன் மிதிருந்த ஆர்வம் போய்விட்டது. மேலும் அடைக்கு அவியல் என்று கொடுக்க ஆரம்பித்த பின் சுத்தம். எனக்கு அடை என்றால் வெல்லம். அல்லது மிளகாய் பொடி எண்ணெய். அதன் மேல் நல்ல கெட்டி தயிர். வாவ்வாவ் வாவ்.. ம்ம்..
விலை அதிகமில்லாத, தரமான, சுவையான லிமிடெட் அயிட்டங்களுடனான உணவகத்ததை அனுபவிக்க வேண்டும் என்கிறவர்கள் நிச்சயம் ஒரு நடை போய்ட்டு வந்திருங்க. இலையை நீங்கதான் எடுக்கணும். பட் இலையில் ஏதாச்சும் மிச்சம் வச்சாத்தானே வழிந்தோடும் பிரச்சனை எல்லாம்.
திருநெல்வேலி தோசைக்கடை
பரணி ஸ்டூடியோ (அ) ஹாஸ்பிட்டல் எதிரில்.
சாலிக்கிராமம்
கேபிள் சங்கர்
https://youtube.com/shorts/UF6cZ9qsNBI?si=x4TGP6w4koDyEoZ4
Post a Comment
No comments:
Post a Comment