Thottal Thodarum

Feb 19, 2024

சாப்பாட்டுக்கடை - தமிழ் முஸ்லிம் கிட்சன்

உணவகமாய் திறந்து அதற்கான மெனக்கெடல்களை விட கொஞ்சம் சுலபமானது க்ளவுட் கிச்சன் தான். அப்படியான க்ளவுட் கிச்சன் எத்தனையோ ஆரம்பித்தாலும் நிலைத்து நிற்பது கிடையாது. காரணம் பல க்ளவுட் கிச்சன்கள் மாஸ்டர்களை நம்பி ஆரம்பிப்பதே. அப்படியே ஒழுங்காய் நடந்தாலும் ஸ்விக்கி ஜொமேட்டோவுக்கு கொடுக்குற காசை மீறி லாபம் எடுக்க முடியாமல்.. சரி அதைப்பற்றி தனியே ஒரு கட்டுரையே எழுதும் அளவிற்கு விஷயம் இருக்கிறது. 

அப்படியான ஒரு கிச்சன் தமிழ் முஸ்லிம் ஸ்டைல் உணவு என்று பார்த்ததும் நம்பரை எடுத்து போன் அடித்தேன். தம்பி எர்ஷத்தான் போன் எடுத்தார். நான் கிச்சன்லேயே வந்து சாப்பிடுகிறேன் என்று அங்கேயே கிளம்பிப் போய் சாப்பிடப் போனேன். என்ன சாப்புடுறீங்க? என்றவரிடம் மெனு கேட்டேன். சீரக சம்பா சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, வஞ்சிரம் ப்ரை, என்றார்.  சரி எல்லாத்துலேயும் கொஞ்சம் சாப்பிடுவோம் என்றேன்.



சீரக சம்பா பிரியாணி டேக்ஸாவை திறக்கும் போதே மணம் நாசியை தாக்கியது. நன்கு வெந்த சிக்கன் பீஸ்களோடு மணக்கும் பிரியாணி வந்தது. வழக்கமாய் சீரக சம்பா பிரியாணி சாப்பிடும் போது அந்த அரிசியின் நல்குணங்களோடு, அளவாக சேர்க்கப்பட்ட மசாலா, சில பிரியாணிக்களீல் சேர்க்கப்படும் பச்சைமிளகாய் சமயங்களில் அடி நாக்கில் சுள்ளென உரைப்பை உணர வைக்கும் கிளுகிளுப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் வித்யாசமனா சுவையில் இருந்தது இந்த பிரியாணி. சாப்பிட்ட மாத்திரத்தில் நல்ல மசாலா சுவையோடு கூடவே சாப்பிட்டு முடிக்கும் போது லேசான ஸ்வீட்னெஸை உணர்ந்தேன். தம்பி பால் ஏதாச்சும் சேப்பீங்களா? என்று கேட்ட போது ஆமாண்ணே.. தேங்காய் பால் கொஞ்சம் பாதம் அரைச்சு விடுவோம் என்றார். உடன் கொடுக்கப்படும் கத்திரிக்காய் வழக்கமாய் எண்ணெய் அதிகமாய் மிதக்கும். இந்த கத்திரிக்காயில் அப்படியில்லை. நன்கு வெந்த கத்திரிக்காய் கிரேவி. அதிக காரம் இல்லாமல் சரியான காம்பினேஷன்.

சிக்கன் 65 வழக்கமாய் இல்லாமல் நல்ல பீஸ்களுடன், மசாலா மேரினேட் ஆகியிருக்க, கார்ன் ப்ளவர் மாவில்லாமல் வெறும் மசாலாவில் மட்டுமே ஊறிய சிக்கன் நன்கு  எலும்பு வரை வெந்திருக்க, எலும்போடு மென்று சாப்பிடக்கூடிய வகையில் இருந்தது. மசாலாவில் உள்ள காரமும், சிக்கனி ஜூசும், நம் சலைவாவோடு கலக்க.. ம்ம்ம்ம்.. செம்ம. 

வஞ்சிரம் மீன் மட்டும் ப்ரை நல்ல சைஸ் பீஸ்சாய் இருந்தது. மசாலா மட்டும் இன்னும் கொஞ்சம் ஏறியிருக்க வேண்டும். பட் குட். வேற ஏதாச்சும் புது அயிட்டங்கள்  போடும் போது சொல்லுங்க என்று சொல்லிவிட்டு அவர் சொன்ன பில் தொகையைப் கேட்ட போது அதிர்ச்சியாய் இருந்து. சிரக சம்பா சிக்கன் பிரியாணி 150 ரூபாயாம். அப்ப மத்ததையெல்லாம் பார்த்துக்கங்க.

சுவிக்கி, ஜொமோட்டோவில் வந்துவிட்டதாய் போஸ்ட் போட்டிருந்தார். வாழ்த்து சொல்ல போன் செய்த போது அண்ணே தேங்காய்ப்பால் ரசம் பண்ணியிருக்கேன் என்றார். உடனே கிளம்பினேன். நான் இது வரை தேங்காய்ப் பால் ரசம் சாப்பிட்டதேயில்லை.  

உலை கொதித்துக் கொண்டிருந்தது. சாப்பிடப்போகிறோம் என்கிற ஆவலில் போனதால் “தம்பி கொஞ்சம் குஸ்கா மட்டும் கொடுங்க” என்று கேட்டேன். தம்பி ஒரு கரண்டி சிரக சம்பா பிரியாணி குஸ்காவைக் கொடுத்தார். முதல் நாள் சாப்பிட்ட சுவையை அப்படியே தக்க வைத்திருந்தார். சாப்பிட்டு முடிப்பதற்குள் சாதம் தயாராகி இருக்க, சுடச்சுட சாதம், தேங்காய்ப்பால் ரசம். கூடவே கேரட் கூட்டு. 

மட்டன், சிக்கன் வேக வைத்த தண்ணீரில் சில சமயம் சூப் வைப்பார்கள். அதுவிதமான அலாதியான சுவையை தரும். கிட்டத்தட்ட மட்டன் தண்ணிக்குழப்பு போன்ற டேஸ்டுடம் தேங்காய்ப் பாலில் செய்யப்பட்ட ரசம். லேசான புளிப்போடு அட்டகாசமாய் இருந்தது. யாராச்சும் இதை வாங்கி சாப்பிடுகிறவர்கள் வீட்டில் சுடான சாதம் வைத்துக் கொண்டு வாங்கிச் சாப்பிடுங்கள். அடிபொலி டிவைனாக இருக்கும். நல்ல தரமான வீட்டு சமையல். தம்பியிடம் இன்னும் நிறைய அயிட்டங்கள் லிஸ்ட் வைத்திருக்கிறார். ஒவ்வொன்றாய் கட்டவிழித்துவிட்டு, களேபரமாய் கடை நடக்க வாழ்த்துக்கள். 

சுவிக்கி ஜோமேட்டோவைத் தவிர, இந்த நம்பரில் போன் செய்தாலும் உடனடியாய் அனுப்பி வைக்கிறார்.  எர்ஷர் 9944995980

கேபிள் சங்கர்.
 

Post a Comment

No comments: