கறி தோசையும் நானும்
எனக்கு
கறி தோசை என்றால் மிகவும் பிடிக்கும். முதன் முதலில் நான் கறி தோசை சாப்பிட்டது மதுரை
கோனார் மெஸ்ஸில். அதுவும் பழைய கடையில். ஒரு பள்ளமான இடத்தில் நின்றபடி மாஸ்டர் தன்
இடுப்பளவுக்கு மேலான தோசைக்கல்லில் தோசை மாவை தூக்கி வீசிய லாவகத்தில் வட்டவட்டமாய்
ஊற்றும் ஸ்டைலாகட்டும், முட்டையை உடைத்து அப்படியே ஒவ்வொரு தோசையின் மேல் கரெக்டாய்
விழுந்த லாவகத்தை வாய்பிளந்து பார்த்தபடி ரெண்டு கறி தோசை ஆர்டர் செய்தோம்.
என்னைப்
பொறுத்தவரை கறி தோசை என்பது அவ்வளவாய் புளிக்காத தோசை மாவில் கெட்டியாகவும் இல்லாமல்,
தளதளவெனவும் இல்லாமல் ஒரு மாதிரி தளுக்கான பதத்தோடு, முட்டையை எடுத்து ஊற்றி, அதில்
நன்கு வெந்த கறித்துண்டுகளை மாவு கீழ் பக்கம் வெந்து கொண்டிருக்கும் போதே மேலே மாசாலாவோடு
வைத்து அழுத்தி, நன்றாக எண்ணெய் விட்டு, கீழ் பக்கம் கருகாத பதத்தில் எடுத்தி அப்படியே
ஒரு திருப்பு திருப்பி, இன்னும் நன்றாக எண்ணெய் விட்டு, கறி, விறகு அடுப்பு என்றால்
சிறப்பு. அன் ஈவனான வெப்பத்தில் திருப்பிப் போட்ட தோசையில் உள்ள கறி மெல்ல வேக ஆரம்பித்து
கிரிஸ்பியாய் மாறும் போது எடுத்து ஒரு திருப்பி திருப்பி, சுடச்சுட சால்னாவோடு சர்வ்
செய்தால் அன்றைய நாள் இனிய நாளே.
அந்த
தோசையை சாப்பிடுவது என்பது அதை விட சிறப்பானது. தோசை சூட்டோடு இருக்க, மேலே ஊற்றப்பட்ட
சால்னாவோடு ஒரு சின்ன விள்ளல் எடுத்து அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒரு புரட்டு புரட்டி,
சின்ன பீஸ் மட்டன் துண்டு ஒன்றோடு வாயில் வைத்தால் கிரிஸ்பியான காரம் சேர்ந்த மட்டன்
வாயில் கரைய வேண்டும். அன்றைக்கு கோனார் கடையில் சாப்பிட்ட அந்த தோசையின் மட்டன் அப்படி
கரைந்தது. அன்றிலிருந்து கறி தோசைக்காக பெரும் தேடல் என்னுள் எழ ஆரம்பித்தது. எப்போது மதுரை போனாலும் அங்கே கறிதோசை சாப்பிட்டு
விட்டுத்தான் வருவேன்.
அதே
போன்ற கறி தோசையை நானும் எங்கு போனாலும் தேடுவேன். கறி தோசை என்று ஒரு முறை ஆர்டர்
செய்த போது பெரிய சாதா தோசைக்கு நடுவில் மட்டன் மசாலாவை வைத்து மாசாலா தோசை போல தந்தார்கள்.
இது கறி தோசைக்கு செய்யும் துரோகம். இது தெரியாமல் அதை ஆர்டர் செய்து சாப்பிடும் ஆட்களைப்
பார்த்தால் பாவமாய் இருக்கும். இன்னும் சில இடங்களில் புளிக்காத தோசை மாவில் கெட்டியாகவும்
இல்லாமல் தண்ணீராகவும் இல்லாத ஒரு தோசை மாவில் கடமைக்கு என்று ஒரு முட்டையை ஊற்றி அதில்
ஸ்பெர்ட் செய்து தடவி, அதன் மேல் மசாலா மட்டுமே அதிகமாய் இருக்கும் மட்டன் மசாலாவை
தடவி ரெண்டு தடவை திருப்பிப் போட்டு இந்தாடா என்று தருவார்கள். அந்த தோசையை பிய்த்து
பார்க்கும் போதே தெரிந்து விடும் அது வேலைக்காகாத தோசை என்று. இன்னும் சில இடங்களில்
மாவெல்லாம் சரியாகத்தான் இருக்கும். கிரிஸ்பினான மட்டன் கறி தோசை என்று காட்டுவதற்காக
வெங்காயத்தை அதிகம் போட்டு மட்டனே நாவில் இடறாத வண்ணம் கிரிஸ்பியான வெங்காயம் அதிகமாய்
இடற, ஆனியம் ஊத்தப்பம் சாப்பிட்ட மனநிலைக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.
சில
வருடங்களுக்கு முன் மதுரைக்கு போன போது அதே கோனார் கடையில் தோசை சாப்பிட்ட ஆர்வமாய்
உட்கார்ந்தேன். பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. எங்கிருந்து கறி தோசையை விரும்ப ஆரம்பித்தேனோ
அந்தக்கடையிலேயே கறி தோசை மகா கேவலமாய் இருந்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவர்கள் சென்னையில் ஒரு ப்ராஞ்ச் ஆரம்பித்திருந்தார்கள். ஆல்பர்ட் தியேட்டர் எதிரில்
அங்கே கருகிப் போன பிட்சா ரேஞ்சுக்கு ஒன்றை தந்தார்கள்.
பின்பு
ஒரு முறை கறி தோசையும் கல் தோசையும் என்றொரு கடை கோடம்பாக்கம் ரஜினி கல்யாண மண்டபத்திற்கு
எதிரே ஆரம்பித்தார்கள். கடையின் செஃப் எனக்கு முன்னமே தெரிந்தவர். என் ரசனையும் தெரிந்தவர்.
போன் செய்து “சார் உங்களுக்கு பிடிச்சா மாதிரி ஒரு க்றி தோசைக் கட” என்று வரச் சொன்னார்.
அட்டகாசமாய் இருக்கு என்று சொல்ல முடியாவிட்டாலும், கிட்டத்தட்ட எல்லா குணங்களையும்
கொண்ட ஒரு தோசையை நான் சென்னையில் கண்டெடுத்துவிட்டேன் என்று சந்தோஷப்பட்டேன். அந்த
சந்தோஷத்தில் மண் விழுந்தது. கடை ஆரம்பித்து ரெண்டு மூன்று மாதங்களில் ஏதோ பிரச்சனையில்
கடையை முடிவிட்டார்கள். எப்போதெல்லாம் எனக்கு
கறி தோசை சாப்பிட வேண்டுமோ அப்போதெல்லாம் சென்னையில் என்னை எல்லா விதத்திலும் திருப்தி
படுத்தும் ஒரு கடை இருக்கிறது. அது தான் தஞ்சாவூர் கட்டையன் மெஸ்.
கட்டையன்
மெஸ்ஸின் கறி தோசைக்கு அவர்கள் கொடுக்கும் ரெண்டு கிரேவிக்கள். ஒன்றில் காரம் நன்கு
தூக்கலாய் இருக்கும். இன்னொன்று முந்திரி அரைத்துவிட்ட கிரேவி. அதுவும் அட்டகாசமாய்
இருக்கும். விறகடுப்பு. அதில் ஊற்றும் போதே கல்லில் பச்சக் என்று ஒட்டிக் கொள்ளும்
பதத்தில் இருக்கும் மாவில் சின்னதாய் ஸ்பெர்ட் செய்து அதில் முட்டை மசாலாவை எல்லாம்
ஊற்றி நன்கு எண்ணெய் விட்டு, இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து தையல் இலையில் வைத்து
கொடுப்பார்கள். மட்டன் நன்கு தென்படும் தோசை. நல்ல மசாலாவோடு பதமாய் வெந்த கறி தோசை.
வாயில் போட்டால் கிட்டத்தட்ட மெல்ட் ஆகிவிடும் டிவைன் தோசை அது கட்டையன் மெஸ் கறி தோசைதான்.
சென்னையின்
சிறப்பான கறி தோசைக் கடையை கண்டெடுத்தும் என் கறி தோசை தேடல் நிற்கவில்லை. ஏனென்றால்
கட்டயன் மெஸ்ஸுக்கு போக வேண்டும் என்றால் இரவில் தான் வசதி. தங்கசாலையில் இருக்கும்
ஸ்டீல் கம்பெனிகளின் டிராபிக்கு மீறி அங்கே கார் எடுத்துக் கொண்டு போவது சாத்தியமில்லாத
ஒன்று. புட் ஆஃபில் வாங்கலாம் ஆனால் ஆறிப் போன கறி தோசையை சாப்பிடுவது என்பது கறி தோசைக்கு
செய்யும் துரோகம் எனவே அதை நான் விரும்ப மாட்டேன். அதனால் நான் கறி தோசையை தேடிக் கொண்டேயிருந்தேன்.
சிக்கன் கறி தோசையைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்
கொள்கிறேன். கறி என்றால் அது மட்டன் தான் மீதி எல்லாம் அதன் பக்கத்தில் சேர்த்துக்
கொள்வதேயில்லை.
தாம்பரம்
தாண்டி ஒரு இடத்தில் நல்ல கறி தோசை கிடைக்கிறது என்றார்கள் என் ஏரியாவிலிருந்து கிட்டத்தட்ட
26 கி.மீட்டர்கள். பரவாயில்லை என்று டிராவல் செய்து போனேன். ஒரு சின்னக்கடை. அதில்
கறி தோசையோடு கறி சோறும் போட்டிருந்தார்கள். கறி தோசை நான் விரும்பிய எல்லா மனம் குணங்களோடு
அட்டகாசமாய் இருந்தது. அப்பாடா ஒரு வழியாய் சென்னையில் ஒரு கடையை கண்டுபிடித்துவிட்டேன்
என்று சந்தோஷப்பட்டேன். கூடவே அவர்களது வடை சட்டி கறி சோறு வேற லெவலில் இருந்தது. அந்த
சந்தோஷம் கொஞ்சம் நாள் கூட இல்லை. சிறிது காலத்திலேயே கடையை மூடிவிட்டார்கள். நல்ல
உணவு கொடுப்பது ஒரு கலை என்றால் அதை அதை சரியாய மார்கெட் செய்து சஸ்டெயின் செய்து இன்னொரு
கலை.
இப்படியான
என் கறி தோசை தேடல் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறது. எங்கே சாப்பிட்டாலும் உடனடியாய்
அடுத்தொரு நாட்களில் கட்டையன்மெஸ்ஸில் போய் ஒரு தோசை சாப்பிடும்படியான கட்டாயத்தோடு
என்னை துறத்துகிறது கறி தோசை. கடை மூடும் முன்பு போன் செய்து வர்றேன் என்று நமக்காக
ஊற்றப்பட்ட கறி தோசையை ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்ட மாத்திரத்தில் உணரும் டிவைன்
அனுபவத்திற்கு ஈடு இணை ஏதுவுமே இல்லை.
கேபிள்
சங்கர்
Post a Comment
No comments:
Post a Comment