Thottal Thodarum

Jul 21, 2024

ஒளியை காவு வாங்கப் போகும் ஒலி

 சினிமாவைப் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதும், பார்க்கும் இளைஞ/ஞிகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் டேஞ்சரான ஒரு ஜெனரேஷன் சினிமாவை அணுகிக் கொண்டிருக்கிறது. அது சினிமாவை கேட்கும் இளைஞ/ஞிகள் கூட்டம். அதிலும் குறிப்பாய் பெண்கள். இவர்கள் படமே பார்ப்பதில்லை. ஆனாலும் பல ஆங்கில/உலக படக்கதைகளைப் பற்றி அவர்களுடன் பேசினால் அய்ய அது போர். இது ஓகே என்று எல்லாம் விமர்சனங்கள் கிடைக்கும். எப்ப பார்த்தே என்று கேட்டால்? யாரு பார்த்தாங்க கேட்டேன் என்கிறார்கள். எங்கேனு கேட்டதற்கான பதில் யூடியூபில் எந்த படமாக இருந்தாலும் அதன் டிரைலரை வைத்தோ? அல்லது அந்த படத்தின் புட்டேஜை வைத்தோ லைன் பை லைன் கதை சொல்கிறார்கள். மேக்சிமம் அரை மணி நேரத்தில் கதை சொல்லி விடுகிறார்கள். விடாமல தொடர்ந்து மூச்சு விடாமல் சொல்கிறார்கள். இதை கேட்டா நீ விமர்சனம் பண்ணுறே? என்று கேட்டதற்கு இந்த படத்துக்கு எல்லாம் இதுவே போதும் என்கிற விமர்சனமும் கிடைத்தது. இவர்களுக்கு பல படங்களின் பெயர்கள் நியாபகத்தில் இல்லவே இல்லை. குறிப்பாய் வெளிநாட்டுப் படங்கள். கதை சொல்லிகளின் சேனல்கள் எனக்கு தெரிந்து இருபதாவது லீடிங்கில் இருக்கிறது. சரி இப்படி கதை கேட்ட படத்தை எப்போதாவது டிவியில், அல்லது ஓடிடியில் படமாய் பார்க்க விழைந்திருக்கிறீர்களா? என்று கேட்டால் வேற வேலையில்லை. ஒரே படத்தை எத்தனை வாட்டி கேக்குறதாம் என்கிறார்கள்.

டிவி சீரியல் பாக்கும் பல பெண்கள் பெரும்பாலும் வேலைகளுக்கு நடுவே கேட்டுக் கொண்டிருப்பதைதான் பார்ப்பதாய் சொல்லுவதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எனவே பெண்கள் இம்மாதிரியான சேனல்களில் கேட்பதை பார்ப்பதாய் சொல்வது ஒன்றும் புதிதில்லை. ஆனால் இந்த லிஸ்டில் ஆண்களும் சேர்வது கொஞ்சம் பயமாய்த்தான் இருக்கிறது. பலர் வழக்கமாய் கேட்கும் ஸ்பீடில் இல்லாமல் 2xல் எல்லாம் வைத்து கேட்கிறார்கள். அதை முதல் முறை ஃபாலோ செய்வது நமக்கெல்லாம் ஆகாத காரியம். என் இளைய மகன் அவனது சி.ஏ. கிளாசையே 2xல் தான் கேட்டுப் படிக்கிறான். உனக்கு புரியுதா என்று கேட்ட போது. நிறுத்தி நிதானமாய் அதை திரும்பச் சொன்னான். மகளொருத்தி ஆடியோ கதைகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறாள். எந்த படத்தின் கதை கேட்டாலும் இதை கேட்டுட்டேன் என்பாள்.என் நண்பர் ஒருவர் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஸ்பீடை அதிகப்படுத்தி ஒன்னரை மணி நேர படத்தை ஒரு மணி நேரத்தில் பார்த்துவிடுவார்.

இப்படியான நிலையில்தான் ஆடியோவாய் பல புத்தங்களை எழுத்தாளர்கள் அனுமதியில்லாமலேயே வெளியிட்டு சம்பாரித்துக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் இதை கேட்டுவிட்டு எதிர்காலத்தில் அந்த எழுத்தாளரின் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி அவரை வாழ வைப்பார்கள் என்று முட்டு வேறு கொடுப்பார்கள்.

20+ இளைஞர்கள் பெரும்பாலும் சிறு முதலீட்டு படங்களைப் பார்ப்பதேயில்லை. அதற்கான உதாரணம் என்னைச் சுற்றியுள்ள சினிமா சம்பந்தப்படாத இளைஞர்கள். இவர்கள் பெரிதாய் விளம்பரப்படுத்தப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள். ஸ்டார் படங்களை மட்டுமே முதல் வாரத்தில் பார்க்கிறார்கள். இல்லையென்றால் பெரிய அளவில் விமர்சனங்கள் தேவையாய் இருக்கிறது. சமீபத்திய இந்தியன் 2 வை எனது மகன்கள் உட்பட, அவர்கள் நண்பர்கள் வட்டாரத்தில் ஒருவர்கூட பார்க்கவில்லை என்கிறார்கள். காரணம் ரிவ்யூஸ் சரியில்லை என்பதுதான். சரி டீன்ஸையாவது பார்த்தார்களா என்று கேட்டால் அதற்கும் அதே பதில் தான். சிறு முதலீட்டு படங்களின் விமர்சனங்கள் இவர்களிடம் ரீச் ஆகும் நேரத்தில் படம் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் இப்படியான ஆடியோ சேனல்கள். அல்லது டபுள் ஸ்பீடில் படம் பார்க்கிறார்கள். இவர்கள் சமீப காலங்களில் மிகவும் அடிக்ட் ஆக இருப்பது அனிமே சேனல்களில் தான். அதனால் தான் எல்லா ஓடிடி தளங்களும் அனிமேவுக்கு மிகவும் முக்யத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு சிரீஸை பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். அப்படியான வேகமான, பேண்டஸியான கதை சொல்லல் அதில் இருக்கிறது.

இவ்வருட ஹிட்டான அரண்மணை 4, கருடன், மஹாராஜா ஆகிய படங்களில் அதிகமான மக்கள் திரையரங்களில் போய் பார்த்த படம் அரண்மனை 4 தான். மற்ற இரண்டு படங்களும் ஹிட் தான் என்றாலும் திரையரங்களில் பெருவாரியான மக்கள் பார்க்கவில்லை. பெரும்பாலும் அப்படங்களைப் பார்த்தவர்கள். 30+ வயதுடையவர்கள்தான். அதனால் தான் இவ்வளவு பெரிய விமர்சனங்களைப் பெற்ற படங்களுக்கு வசூல் 30-40 கோடிக்குள். ஆனால் அதே அரண்மனை4 பற்றிய விமர்சனங்கள் பெரிதாய் இல்லாவிட்டாலும் குடும்பம் குட்டிகளுடன் இளைஞர்களும் போய் பார்த்ததினால் தான் 60-70 கிராஸ். திரையரங்கில் போய் பார்க்கும் படங்களில் ஒரு கொண்டாட்ட மனநிலை உள்ள படங்கள் தான் கூட்டம் வருகிறது. அப்படி இல்லாத படங்கள் ஓ.டி.டிதான். சரி ஓடி.டியில் வந்தவுடன் என்ன ரிசல்ட் என்று யோசிக்கும் போது அதற்கு ஆப்பு வைக்கும் இடத்தில் தான் இந்த ஆடியோ கதை சொல்லிகள். ஓடிடியில் வந்ததும் படத்தின் புட்டேஜை சின்னச் சின்னதாய் எடுத்து கதை சொல்லும் இடங்களுக்கு பின்னணியில் அதை வீடியோவாக ப்ளே செய்து, படம் பார்க்கும் இந்த கூட்டத்திற்கு ஆப்பு வைக்கிறார்கள். ரெண்டு நாள் முன் தான் Omli Music Sathya Moorthy உடன் பேசிக் கொண்டிருக்கும் போது இன்னும் சில வருடங்களில் ஆடியோ தான் உலகை ஆளப் போகிறது என்று விசில் லாஞ்ச் சமயத்தில் அட்டெண்ட் செய்த செமினாரில் பேசியதைப் பற்றி பேசிக் கொண்டிருதோம். இதையும் யாராவது படித்து ஆடியோவாக விட்டால் 2எக்ஸில் கேட்டாவது ரீச்சாகுமா? என்று பார்க்க வேண்டும்.

கேபிள் சங்கர்


Post a Comment

No comments: