3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்
மணி
வடைகடையில் வடை எப்போதுமே சூடாய் போடப் போட காலியாகிக் கொண்டேயிருக்கும். நானும் எனது
நண்பர்களும் எப்போதும் அங்கே மாலை வேளையில் வடை சாப்பிட போய்விடுவோம். அப்படியான ஒரு
மாலை வேளையில் வடை சாப்பிட்டுவிட்டு கிளம்பிய போது இரண்டு சிறுவர்கள் அல்லது பையன்கள்
என்று கூட சொல்லலாம். கிட்டத்தட்ட ஆவிச்சி ஸ்கூல் திருப்பத்திலிருந்து ஓடி வந்தார்கள். எங்களைப் பார்த்ததும் என்ன தோன்றியதோ இரண்டு பையன்களும்
நின்றுவிட்டு, அதில் சிகப்பாய் சேட்டுப் பையன் போல இருந்தவன் “சார்.. இவருக்கு ஒரு
ஹெல்ப் பண்ணுறீங்களா?” என்று பக்கத்திலிருந்த
டிபிக்கல் பிகாரி லுக்கில் இருந்த பையனை காட்டி நல்ல தமிழில் பேச ஆரம்பித்தான்.
“என்ன
தம்பி என்ன பிரச்சனை?”
“சார்.
ஆவீச்சி பஸ் ஸ்டாண்டுல இறங்குனேன் அப்ப இவரை சுத்தி ரெண்டு மூணு அரவாணிங்க நின்னுட்டு
இருந்தாங்க. பேசிட்டி இருக்கும் போதே அவரோட பர்ஸுலேர்ந்து பத்தாயிரம் ரூபா எடுத்துட்டாங்க.
நான் அதைப் பார்த்ததும் என்னான்னு கேக்கப் போனப்ப என்னோட செல்ல புடுங்க வந்தாங்க. இவரோட
செல்லையும் புடுங்க பின்னாடி துறத்துனாங்க. அதான் ஓடி வந்துட்டோம். கொஞ்சம் போலீஸுல
கம்ப்ளெயிண்ட் பண்ணுறீங்களா?” என்று மூச்சிரைக்காமல் பேசினான்.
பக்கத்திலிருந்த
வடக்கன் பையன் முகத்தில் ஏகப்பட்ட களேபரம். நண்பர் உன் போன்லேர்ந்து 100க்கு போடு என்று
சொல்ல அவன் போனிலிருந்து நம்பர் போகவில்லை. ஆளாளுக்கு அவரவர் நம்பரிலிருந்து போன் போட
எல்லோருக்குமே உடனே கிடைக்கவில்லை. என் போனிலும் அதே ப்ரச்சனைதான். பின்பு ஒரு வழியாய்
கனெக்ட் ஆனது.
“கண்ட்ரோல்
ரும் என்ன விஷயம் சொல்லுங்க”
“சார்
என் பேரு சங்கர் நாராயணன். இங்கே ரெண்டு பசங்க ரெண்டு பேரும் வட இந்திய பசங்க… “
“சார்..
நான் திருவண்ணாமலை பையன் சார். “ என்றான் சேட்டுப் பையன் போல இருந்தவன் குறுக்கிட்டு.
“சாரி
சார். .ரெண்டு பேரு ஒருத்தர் வட இந்திய பையன். அவங்க ஆவிச்சி ஸ்கூல்ல இருந்த போது அங்கே
நின்னுட்டிருந்த திருநங்கைங்க மூணு பேரு இந்திக்கார பையன் கிட்ட பர்ச புடுங்கி 10 ஆயிரம்
ரூபாய் எடுத்துட்டு, துறத்திவிட்டாங்க. கூட ஹ்லெப் பண்ணப் போன திருவண்ணாமலை பையன் போனையும்
புடுங்க வந்திருக்காங்க. நாங்க இங்க பாஸர் பை. சின்னப் பசங்களா இருக்குறதுனால ஹெல்ப்
பண்ணுறோம். இதான் என் நம்பர்.” என்றேன்.
“ஆவிச்சி
ஸ்கூல்னா.. அது எங்க இருக்கு?”
“சார்.
ஆவிச்சி ஸ்கூல் சார்.. வடபழனி தாண்டி..”
“அதாங்க
சார்.. வடபழனின்னா.. அது எங்க..?
“சென்னை
சார்..”
“சென்னையா
அதை சொல்லுங்க. இது கால் ரூட் ஆகி சேலம் கண்ட்ரோல் ரூமுக்கு வந்திருக்கு. உங்க பக்கத்துல
இருக்குற ஸ்டேஷன் எந்த ஏரியானு சொல்லுங்க. அங்கேயிருந்த் பீட்டை வரச் சொல்லுறோம்” என்றார்.
”சார்.
பக்கத்துல ஆவிச்சி ஸ்கூல்னா விருகம்பாக்கம் ஸ்டேஷன் தான் வரும்.”
“வடபழனின்னு
சொன்னீங்க.. ?”
“இல்ல
சார். சென்னையில வடபழனி ஒரு முக்கியமான இடம் அதன் பக்கத்துல இந்த ஆவிச்சி ஸ்கூல் இருக்கு
அதான் ஒரு லேண்ட் மார்க்குக்காக சொன்னேன்’
“சரிங்க
உங்க நம்பருக்கே கூப்பிடச் சொல்லுறேன்.’ என்று போனை கட் செய்தார்கள். உடனிருந்த் நண்பர்களூக்கு
ஏற்கனவே ஒரு வேலையோடுதான் வந்திருந்தார்கள். எனவே அவர்களை கிளம்பச் சொல்லிவிட்டு, திருவண்ணாமலை
பையனை பார்த்தேன். அவன் பார்த்த மாத்திரத்தில் ‘சார்.. நான் கேஸெல்லாம் கொடுக்கலை.
இவருக்கு உதவி செய்யலாம்னுதான் இருந்தேன். நான் +2 ஸ்டூடண்ட் தான். தேங்க்ஸ் சார்”
என்று கிளம்பினான். “ரொம்ப நல்ல வேலை செய்த தம்பி. இப்படி உதவ தைரியம் வேணும். கீப்
டூயிங்” என்று சொல்லி பாராட்டினேன். முகம் சிவந்து சிரித்தபடி, ஹிந்திக்கார பையனிடம்
அவனுக்கு புரிந்தாலும் புரியாவிட்டாலும் என்ன என்பது போல “நான் வர்ரேன்’ என்று சொல்லிவிட்டு
கிளம்பினான். அவனும் மையமாய் தலையாட்டினான்.
நானும்
அந்த வடக்கன் பையனும் மட்டுமே ரோட்டில் நின்றிருந்தோம். எனக்கு ஹிந்தி படம் பார்த்தால்
சப்டைட்டில் இல்லாமல் புரியும் அளவிற்கு இந்தி ஆத்தா ஹை என்பதால் “துமாரா நாம் க்யா
ஹை” என்றேன்.
“சோனாட்டி’
“க்யா..
?”
“சோனாட்டி”
என்று அழுத்தமாய் சொன்னான்.
“கஹா
சே ஆதா ஹூ?”
“ஒரிஸ்ஸா”
ஒரிஸ்ஸாவிலிருந்தும்
வடக்கன்கள் பிஹாரிகளாய் கருதப்படுகிற ஒரு பொது புத்தியை உணர்ந்தேன்.
“நாம
வெயிட் செய்வோம் என்று சொல்லி காத்திருக்க ஆரம்பித்தோம். அதற்கு ஒரு நடை அந்த திருநங்கைகள்
இருந்த இடத்திற்கு போகலாம் என்று அவனைக் கூட்டிக் கொண்டு சென்றேன். மணி கிட்டத்தட்ட
ஆறு ஆனதால் லேசாய் இருண்டிருந்தது. அவன் சொன்னார்ப் போல மூன்று திருநங்கைகள் இருந்தார்கள்.
ஒரு பெரிய திருட்டை செய்துவிட்டு கொஞ்சம் கூட பயமில்லாம்ல இருப்பதைப் பார்த்தாலே அவர்கள்
எதையும் டீல் செய்ய தயாராக இருப்பவர்கள் என்று புரிந்தது. நாம் நேரில் சென்று பேசினாலும்
ப்ரசனையை வேறு விதமாய் மாற்றக்கூடியவர்கள் என்று புரிந்ததால் காத்திருக்க ஆரம்பித்தோம்.
சுமார் அரை மணி நேரம் கழித்து ஒரு கால் வந்தது.
“சார்..
போலீஸ்லேர்ந்து பேசுறோம் 100 கால் பண்ணியிருந்தீங்களா?”
“ஆமா
சார்”
“என்ன
ப்ராப்ளம் சொல்லுங்க?’
“சார்.
ப்ராப்ளம் எனக்கில்லை. என்று ஆர்ம்பித்து சோனாட்டிக்கு ஏற்பட்ட பிரசனையயும் திருவண்ணாமலை
பையன் சொல்லி நான் புரிந்து கொண்டதை விளக்கினேன்.
“அந்த
பையன் அங்க பிடிச்சி வ்ச்சிருக்கீங்களா?’
“சார்
அவன் சின்னப் பையன் இந்த அளவுக்கு உதவ வந்தவனை நான் ஏன் பிடிச்சி வச்சிக்கனும். பாதிக்கபட்ட
பையன் இங்க இருக்கான். பணம் புடுங்கின திருநங்கைகள் இங்க பஸ்ஸ்டாண்டுல இன்னும் ஜாலியா
இருக்காங்க. வந்தா பிடிச்சி பணத்தை வாங்கிரலம சார்’
“நீங்க
யாரு?”
“சார்.
அதான் சொன்னேனே பாஸர் பைனு. என் பேரு போன் நம்பர் எல்லாம் கொடுத்திருக்கேன்’
“எந்த
ஏரியான்னு சொன்னீங்க?”
“சார்
விருகம்பாக்கம் ஆவிச்சி ஸ்கூல் பஸ்ஸ்டாபுல”
“அப்ப
ஏன் சார் வடபழனி போலீஸை கூப்பிட்டீங்க?” என்று கோபமாய் கேட்டார்.
“நான்
எங்க சார் கூப்பிட்டேன். 100க்கு அடிச்சா அது சேலம் கண்ட்ரோல் ரூமுக்கு போச்சுன்னு
அவங்க கிட்ட சொல்லும் போதே வளசரவாக்கம் ஸ்டேஷனுக்கு டைவர்ட் பண்ணுங்கன்னு சொல்லித்தானே
வச்சேன் ‘ என்றேன்.
‘என்னா
சார்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நான் வளசரவாக்க ஸ்டேஷனுக்கு சொல்லி வரச் சொல்லுறேன்.
அது வரைக்கும் அந்த க்ரூப் என்ன பண்ணுறாங்கன்னு பார்த்துக்கங்க’ என்றார்.
“சார்..
நான் எப்படி சார்?” என்று என் குரல் கேட்பதற்கு முன்னாலேயே போன் கட் செயப்பட்டது.
சோனாட்டி
ஏதும் புரியாமல் அப்பாவியாய் என்னை பார்த்தான்.
“போலீஸ்
வருவாங்க”
“ஓ
தானா ஆயேகா?”
தானா
எப்படி வருவாங்க? நாம போன் பண்ணதுனாலத்தானே வருவாங்க என்று நினைக்கும் போதே ஓ போலீஸுக்கு
ஹிந்தியில் தாணா என்று புரிந்து.. ஆயேகா ஆயேகா என்றேன்.
பத்திருபது
நிமிடங்கள் போனது. மீண்டும் இப்போது போன்.
”சார்.
வணக்கம் நாங்க வளசரவாக்கம் பேட்ரோல். 100க்கு கால் பண்ணியிருக்கீங்க? என்ன ப்ராப்ளம்?”
அஹா
மொதல்லேர்ந்தா? என்று யோசித்தபடி எல்லாவற்றையும் மீண்டும் ஒப்பித்தேன்.
‘அப்ப
விக்டிம் நீங்க இல்லை?”
“ஆமா
சார்’
“ஹிந்திக்கார
பையன்கிட்ட பத்தாயிரம் எடுத்துட்டாங்க”
“ஆமா
சார்.”
”சம்பவம்
எங்க நடந்திச்சு?”
ஆவிச்சி
ஸ்கூல் பஸ்ஸ்டாப்”
“அது
எங்க ஏரியா வராதே சார்?”
“அதுக்கு
நான் என்ன சார் பண்ணுறது?”
“நீங்க
சரியான ஸ்டேஷனுகுக் போன் பண்ணியிருக்கணும் சார்”
“சார்.
நான் கால் பண்ணுனது 100க்கு”
“அவங்க
கிட்ட நீங்கதான் சரியான ஸ்டேஷனை சொல்லணும் சார். இல்லாட்டி எப்படி குற்றவாளியை பிடிக்ககிறது?.
அங்கே அவளுங்க இருக்காளூங்களா?
“இல்லை
சார். இருட்டுல தெரியலை”
“நீஙக்
என்ன பண்ணுறீங்கன்னா அதே எடத்துல நில்லுங்க. இது கே.கே.நகர் ஸ்டேஷன் ஏரியாவுல வரும்
அவங்களை வரச் சொல்லுறேன்” என்று போனை வைத்துவிட்டார்.
என்ன
இழவுடா இன்னைக்கு இப்படி என்று யோசித்துக் கொண்டே சோனாட்டியை பார்த்தேன். அவன் கண்ணீர்
மல்க என்னைப் பார்த்தான். வேறு வழியில்லை ஏதாவது ஒரு போலீஸ் டீமிடம் விட்டுவிட்டுத்தான்
போக வேண்டும் என்று முடிவு செய்து காத்திருந்தேன். மீண்டும் ஒரு அரை மணி நேர ஆனதே தவிர
எந்த தாணா காரணும் வரவில்லை கூப்பிடவும் இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் காத்திருக்க
டைம் இல்லாமல் அலுவலகத்தில் நண்பர் ஒருவர் வேறு காத்திருந்ததால் சோனாட்டியிடம் “நீ
இங்கே இரு. நான் ஆபீஸுக்கு போய்ட்டு வர்றேன். உன் நம்பரை போலீஸுக்கு கொடுத்திருக்கேன்
அதையும் மீறி என்னை கால் பண்ணா வர்றேன். எனக்கு அப்டேட் பண்ணு என்று சொல்லிவிட்டு என்
அலுவல்கத்துக்கு கிளம்பினேன். நண்பரைப் பார்த்துவிட்டு அவரை அனுப்பி வைக்க வெளியே வரும்
போதும் கால் வந்தது.
“சார்..
நாங்க கே.கே.நகர் பேட்ரோல். என்ன விஷயம்?”
நான்
மீண்டும் பாஸ்ட் கட்டில் காட்சிகளை சொல்லிமுடித்த போது “நாங்க ஸ்பாட்டுலதான் இருக்கோம்.
பையன் அங்க இருக்கானா?”
“ஆமா
சார் பையன் அங்கதான் இருக்கான். அவன் நம்பர் கூட 100ல கொடுத்திருந்தேனே?”
“அதெல்லாம்
எங்க கிட்ட இல்லை. நம்பர் சொல்லுங்க” என்று கேட்டவர் பக்கத்திலிருந்தவரிடம் “நம்பர்
நோட் பண்ணி கால் பண்ணுய்யா” என்று பணித்தார். நான் நம்பர் சொல்ல சொல்ல, இவர் சத்தமாய்
வாய் விட்டு சொல்ல பகக்தில் இருந்தவர் நம்பரை அவரது போனில் பீட் செய்யும் பீக் சத்தம்
கூட கேட்டது. சிறிது நேர அமைத்திக்கு பிறகு கால் கனெக்ட் ஆகி. “ஹலோ சோனாட்டி.? நாங்க
கே.கே நகர் போலீஸ்” என்று இவர் தமிழில் பேச, எதிர் முனையில் சோனாட்டி ஹிந்தியில் கடகடவென
பேசியிப்பான் போல.. போன் பேசியவர் குரலில் பதட்டத்துடன் “ இருடா. இருடா.. நீ பாட்டு
ஹிந்தியில பேசுற” என்று பக்கத்திலிருந்த அதிகாரியிடம் “சார்.. ஹிந்திக்காரன் சார்”
என்று கண்டுபிடித்தார்ப் போல சொன்னார்.
“சார்.
நான் தான் முதல்லேந்து சொல்லிட்டிருக்கேனே?”
“சரி
சார் நாங்க பார்த்துக்குறோம். உங்களுக்கு இந்த பையனுக்கு என்ன தொடர்பு?”
என்னாது
முதல்லேர்ந்தா?
அதான்
சொல்லியிருக்கேனே சார். அந்த சார் கிட்ட.. அவர் கிட்ட கேட்டுக்கங்க. .பாவம் பையன் பணத்த
தொலைச்சிட்டு இருக்கான்’
என்றதும்
என் போனை கட் செய்துவிட்டார்கள்.
மீண்டுமொரு
அரை மணி நேரத்திற்கு பின்னால் சோனாட்டி அவன் நம்பரிலிருந்து கூப்பிட்டான். “என்ன பையா
சொல்லு?”
“இங்க
தமிழ் தானாகாரர் கிட்ட நடந்ததை தமிழ்ல சொல்லுங்க’ என்றான்.
இது
ஸ்டேஷன் போல பின்னணீயில் நான்கைந்து பேர் பேச்சு. நடு நடுவே ஓ கெட்ட வார்த்தையில் வேறொரு
அக்யூஸ்டை திட்டியபடி “சொல்லுங்க சார்.. என்ன நடந்துச்சு”
ரொம்பவே
ஆயாசமாய் இருந்தது. இருந்தாலும் விரிவாக இவரின் போனுக்கு முன்னால் நடந்தவரை எல்லாவற்றையும்
சொன்னேன். “இதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க. இத்தனை ஸ்டேஷன் தாண்டி நீங்க
வர்றதுக்குள்ளே குற்றவாளி போயே போயிட்டான். 100க்குபோன் அடிச்சா உடனே வருவாங்கன்னு
மக்கள் நினைச்சிட்டிருக்காங்க” என்று கடுப்பாகவே சொன்னேன்.
“சார்..
நாங்க பாத்துக்குறோம்” என்று போனை கட் செய்தார் அந்த அதிகாரி.
நடு
ராத்திரி மீண்டும் சோனாட்டியிடமிருந்து போன். “என்ன தம்பி? என்ன ஆச்சு?” என்று வினவினேன்.
“சாப்..
அந்த தாணாக்காரங்க திரும்பவும் அதே பஸ்ஸ்டாண்டுக்கு கூட்டிட்டு போய் அங்கேருந்த சிசிடிவி
புட்டேஜை பார்த்து பையன் சொன்னதை உறுதிப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களை பிடித்ததும்
கூப்பிடுகிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள். அடுத்த நாள் கூப்பிட்ட போது
அதில் ஒருவரை கோவையில் வைத்து பிடித்துவிட்டதாய் சொல்லியிருக்கிறார்கள். பின்பு எந்த
செய்தியும் இல்லை. இது நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்ட படியால் சோனாட்டியை அழைத்தேன்.
“ஒண்ணியும் ஆகலை சாப். எங்க ஆபீஸுல சொல்லிட்டாங்க காசு எல்லாம் வராதுன்னு. கேஸும் இருக்கா இல்லையான்னு தெரியலை” என்றான். தமிழ்ல பேசினாலே வேலைக்காகாது இதுல இந்திக்காரன் வேறு. சரி பார்த்துக்க ஏதாச்சும் உதவின்னா கால் பண்ணு என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நுங்கம்பாக்கம் அருகில் இருந்த ஒரு பஸ்ஸ்டாண்டில் அன்று பார்த்த அதே முன்று திருநங்கைகள், ஒரு இளைஞனை சுற்றி நின்றிருந்தார்கள். 100க்கு போன் பண்ணலாமா? வேண்டாமா?
கேபிள் சங்கர்.
No comments:
Post a Comment