ஷேர் ஆட்டோக்காரின் பரிதாபங்கள்.

எங்களுடய காமு.காபி படத்தின் வேலை காரணமாய் க்யூப் வரை போக வேண்டிய வேலை. மைலாப்பூருக்கு ஆஞ்சநேயர் கோயில் வழியாய் மைலாப்பூர் சபா தாண்டி இஸபெல்லா ஆஸ்பிட்டலுக்கு பக்கத்தில் அந்தப் பக்கம் போக ஒரு சந்து இருக்கும் அது வழியாய்த்தான் நான் எப்போதும் போவது வழக்கம். மெட்ரோ பணிகளின் காரணமாய் சென்னையில் பல ரோடுகள் ஒன்வே ஆகியிருப்பது உத்துப் பார்த்து ஓட்டினால் ஏதாவது குழியில் விழ வாய்ப்பிருக்கிறது என்பதால் தோராயமாய் பார்த்து ஓட்டியே பழக்கப்பட்டதில் ஒன்வே சைனை பார்க்காமல் நுழைந்து விட்டேன். 

குட்டியூண்டு டனலில் ஓவர்ப்ளோ போக நானொரு வண்டி மட்டுமே எதிர்பக்கம் போக, என் எதிர்பக்கம் ஏகப்பட்ட வண்டிகள். நட்ட நடுவில் மாட்டிக் கொண்டு விட்டேன். திரும்பப் போகவும் முடியாது. ஏனென்றால் கிடைக்கிற கேப்பில் எல்லாம் பைக்கும் சைக்கிளும் நுழைந்து அவர்கள் பாட்டுக்கு போய் கொண்டிருந்தார்கள். எதிரே வந்த ஆட்டோக்காரர் “சார் இது ஒன்வே சார்” என்றார். “ஆமாங்க .. சாரி பார்க்காம வந்திட்டேன் சாரி. ரிவர்ஸ் போக முடியலை. கார் பெருசு வேற” என்று சோகமாய் சொன்னேன். ஆட்டோக்காரர் என்பதால் என் வண்டிக்கும் ரோட்டுக்குமிடையே இருந்த ஒரு சிறு கேப்பிள் தன் முன்வீலை விட்ட நொடியில் சிட்டாய் பறந்துவிட்டார். ஒரு வழியாய் ரெண்டு மூன்று வண்டியை உரசாமல் தாண்டி ஒரு பெரிய வழி ஓப்பனாக, ஆரன் அடித்துக் கொண்டே எதிரே வரும் வண்டிக்கும் டிம்டிப் லைட்டெல்லாம் போட்டு ஓட்ட ஆரம்பித்தேன். 

அதையெல்லாம் பார்த்தபடியே ஒரு ஷேர் ஆட்டோ நுழைத்தார். ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி எப்படி போவ பார்க்கலாம் என்று நக்கலாய் பார்த்தார். “சார். கொஞ்சம் ஓர்ம ஒதுங்கினீங்கன்னா? நான் போயிருவேன்” என்று கெஞ்சலாய்த்தான் கேட்டேன்.
“அத்தனாம் பெரிய போர்ட்டை வச்சிருக்காங்க. அதைப் பார்க்காம வருவியா?” என்று சத்தம் போட்டார். சரி தப்பு நம்முளூதுதான். அதுவும் வெய்யில் காலத்தில் எதிர்பேச்சு பேசினால் நிச்சயம் கலகலப்பு.. சே. கைகலப்பு ஆக வாய்ப்பிருப்பதாலும் அப்படியே ஆனாலும் கதவை திறந்து இறங்கிக்கூட சண்டை போட முடியாத அளவிலேயே கேப் இருந்ததால் “சாரி சார்.. தெரியாம வந்திட்டேன்:
“என்ன தெரியாம வந்திட்டேன். எப்படி வரலாம்?’ என்றார்.இப்போது அவரின் குரலில் சத்தம் ஏறியிருந்தது. 
“அதான் தெரியாம வந்திட்டேன்னு சொல்லுறேனே சார்.. வேணும்னா ஒண்ணு பண்ணுவோமா? கொஞ்சம் ஹெல்ப் பண்ணீங்கன்னா என் காரை அலேக்கா தூக்கி திருப்பி வச்சிருவோமா? அதான் பார்க்கலை வந்திட்டேனு சொல்லுறேனே சார்” என்றேன் குரலில் கோவமே இல்லாமல். 
“ஆஹாங்.. நல்லா திருப்பி வைக்க சொல்லுவ.. ஏன் சொல்ல மாட்டேன். காருல போகும் போது உன்னை விட சின்ன வண்டிக்காரனை திட்ட மாட்டேன்னு சொல்லு நான் வழி உடுறேன்” என்றான்
“நான் எப்ப திட்டுனேன்?”
“திட்டியிருப்ப இல்லை?”
என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. கிட்டத்தட்ட முழித்தேன். 
“இனிமே திட்டமாட்டேன்னு முடிவு பண்ணிக்க” என்று வழிய விட்டார். 

நான் தான் திட்டவேயில்லையேடா.. என்று வடிவேலு டோனில் தான் என் குரல் எனக்கே கேட்டது.  சரிங்க நான் திட்டலைன்னு  சொல்லி, அந்த சந்திலிருந்து வெளியே வந்தேன். எனக்குன்னு எங்கேர்ந்துடா வர்றீங்க? 

Comments

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.